ஜாவா

இளவஞ்சியின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆனந்தப்பட்டுப் பின்னூட்ட ஆரம்பித்து கட்டுப்படியாகாமல் போகவே தனிப்பதிவாகப் போட்டுவிடலாம் என்ற உத்தேசத்துடன் இந்தப் பதிவு! இளவஞ்சிக்கு நன்றி.

அவருக்கு என்ஃபீல்டு புல்லட்டின் நினைவுகள் போல எனக்கு ஜாவாவும் யெஸ்டியும் கலந்த நினைவுகள்.

ஜாவாவையோ என்ஃபீல்டையோ ஓட்டாத ஆத்மாக்களையெல்லாம் நான் சைக்கிள்காரர்களோடுதான் சேர்த்துப் பார்ப்பேன்! டூ-வீலர்ங்கற பேர்ல 100 ஸிஸி வண்டிங்களையெல்லாம் இங்கிட்டும் அங்கிட்டும் ஓட்டிக்கிட்டு படம் காட்டறவங்களைக் கண்டாலே சிரிப்பா இருக்கும். என்ஃபீல்டு அண்ணன் அருமையானவர்தான். ஆனா அவரு (இளவஞ்சி சொன்னமாதிரி) பெரிசுங்க ஓட்ற சமாச்சாரம்ங்கறதால ஜாவாதான் நமக்கு வசதிப்பட்டுச்சு.

பொதுவா சைக்கிள்ளருந்து டூவீலருக்கு மார்றவங்க மொதல்ல டிவிஎஸ்50 இல்லாட்டி லூனா மாதிரி ஒண்ணுல ஆரம்பிச்சு ‘பழகி’ பின்னால 100 ஸிஸி எதுக்காவது மாறுவாங்க. எனக்கு என் நண்பன் ராஜாங்கம் புண்யத்துல நேரடியா ஜாவாலதான் பயணம் ஆரம்பிச்சது. இன்னும் நல்லா நினைவு இருக்கு. பழங்காநத்தம் தண்டக்காரன் பட்டில அவன் அவனோட சித்தப்பா கடைலருந்து ‘எடுத்துட்டு’ வந்த ஜாவாவை ஒதுக்குப்புறத்துக்குக் கொண்டுபோய் ‘ஓட்டுடா’ன்னு இறங்கிச் சொன்னதும் படிக்காத பரீச்சைக்குப் போய் கேள்வித்தாளைப் பாத்ததும் வயித்துல புளியைக் கரைக்குமே அது மாதிரி ஜிலீர்னு இருந்துச்சு. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு அவனப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு ஏறி உக்காந்துக்கிட்டு ஒண்ணுக்கு போற நாய் மாதிரி இடது காலைத் தூக்கிக்க அவனே ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தான். மொதல் கியர்ல போட்டு எடுத்தும் ஒரு தவ்வு தவ்வி அணைஞ்சு போச்சு. ‘கிளட்ச மெள்ள விட்றா’ என்று அவன் சொல்லி மறுபடி ஸ்டார்ட் பண்ணிக் கொடுக்க, ரெண்டடி போயிருக்க மாட்டேன். லாடம் அடிக்க மாட்டைச் சாச்சாப்புல அப்படியே வலது பக்கம் சாஞ்சிச்சு பாருங்க. காலு போச்சுன்னு நெனச்சுக்கிட்டு தரைல சாஞ்சா, வண்டி பட்டர்ஃபிளை பம்பர்ல சாஞ்சிக்கிட்டு நிக்குது. வண்டிக்கும் தரைக்கும் எடைல ஒரு ஆளு கைலிக்குள்ள படுத்துத் தூங்கலாம் போல. எந்திருச்சு தூக்கலாம்னு தூக்குனா பொணங்கனம் கனக்குது. ராஜாங்கம் வந்து நிமித்திக் கொடுத்து அப்றம் ஒரு வழியா ஓட்ட ஆரம்பிச்சேச்சு.

அதுல ரொம்பப் பிடிச்ச விஷயமே தெருல போம்போது சைக்கிள் மொபெட்னு எல்லாப் பயலும் ஒதுங்கி வழிவிடறதுதான். தெருக்கோடில வரும்போதே தெரிஞ்சுடும். ஸ்டார்ட் பண்ணிட்டு வண்டிக்கு நாலடி பின்னாடி நின்னு அதோட ஸைலன்ஸர்லருந்து ‘பக் பக்’னு வர்ற காத்து கால்ல படறதை அனுபவிக்கறது அலாதியான விஷயம் (இது என்ஃபீல்டுல இன்னும் விசேஷம். பட்டமே விடலாம் போல!)

என்ஃபீல்டு மாதிரி எருமை மாட்டு முதுகு டிஸைன் கிடையாது ஜாவாவுக்கு! பெட்ரோல் டாங்க் கும்முன்னு காளைத் திமில் மாதிரி இருக்க நம்ம குதிரை மேல ஒக்காந்து போற மாதிரி ஒக்காந்துக்கிட்டு போனோம்னு வைங்க.

ரெண்டாவதா என்ஃபீல்டு மாதிரி ஒர்ரே ஒரு பீரங்கி ஸைலன்ஸர் மட்டும் கிடையாது. இது ரெட்டைக் குழல் துப்பாக்கி மாதிரி. வண்டி என்னவோ டீலர்கிட்ட இருந்து வரும்போது மஃப்ளர் எல்லாம் போட்டு சாதுவா சத்தம்போடாமத்தான் வரும். வந்ததும் சந்தனம் குங்குமம் வச்சு சாமி கும்பிடறோமோ இல்லையோ, மொத வேலையா ரெண்டு ஸைலன்ஸர்லருந்தும் மஃப்ளரை உருவி எடுத்துருவோம். அப்றம் அது மூக்கணாங்கயிறு போடாத காளை கன்னுக்குட்டி மாதிரி ஆயிடும். ஆக்ஸிலேட்டரை ஒரு திருகு திருகி விட்டோம்னு வைங்க – டம்… டம்…டம்…னு ஒரு சீரான தாளம் அப்படியே ரொங்க வைக்கும். பாலத்துல போகும்போது பாலம் ஏத்தம் முடியறவரைக்கும் ஆக்ஸிலேட்டரைக் கொடுத்துட்டு இறக்கம் ஆரம்பிச்சதும் விட்ருவோம். டம்… டம்…னு இறங்கும் பாருங்க. சான்ஸே இல்லை.

ஜாவா பின்னாடி யெஸ்டியா உருவெடுத்தப்போ பெட்ரோல் டாங்க் ரெண்டு பக்கமும் லைட்டா உள்ள தள்ளி முழங்கால் ரெண்டையும் அண்டக் கொடுத்துக்கிட்டு ஓட்டலாம் மாதிரி டிஸைன்ல இருந்தது. அப்படியே குதிரை முதுகுல ஒக்காந்துட்டு போற ஃபீலிங் வந்துரும்! அது தவிர பிரிடேட்டர் வில்லன் தலை மாதிரி ஹேண்டில்பாரோட சேந்து இருந்த ஹெட்லைட்டை யெஸ்டில எடுத்துட்டு ரவுண்டா அழகா தனியா வச்சிட்டாங்க. எல்லாத்தையும் விட ஜாவாவோட சாவியை யாராச்சும் பாத்திருக்கீங்களா? காது குடையற கம்பி மாதிரியே இருக்கும். அதைப் போட்டு கிட்டத்தட்ட எல்லா ஜாவாவையும் ஸ்டார்ட் பண்ணிரலாம் போல இருக்கும். அதையும் யெஸ்டில மாத்தினாங்க.

இளவஞ்சி சொன்ன சைடு பீரோதான் பெரிய கோராமை. அது இருந்தாலே வண்டி ஒரு பக்கம் இழுக்கறமாதிரி பிரமை. அதை எடுத்துக் கழட்டிப் போட்டதும்தான் வண்டி லேசான மாதிரி மைலேஜ் கூட ரெண்டு கி.மீ. எக்ஸ்ட்ரா கொடுத்திச்சு.

யெஸ்டிலயும் மொத கியரு மேல – மத்ததெல்லாம் கீழ. அதுக்கு உல்ட்டாவா யமாஹால இருக்கும்.

கியருக்கும் ஸ்டார்ட்டருக்கும் ஒரே லீவர். லீவரோட ஆக்ஸில் பக்கத்துல அமுக்கி அதை உள்ள தள்ளி ஒரு அரைவட்டமா பின்னாடி எடுத்து மிதிக்கணும். மிதிக்கணும்னா சும்மா பேச்சுக்கு மிதிக்கறது இல்லை. மக் மக்குன்னு நாலஞ்சு தடவை பம்ப் பண்ணிட்டு மிதிச்சோம்னா அழகா ஸ்டார்ட் ஆகும். ஸ்டார்ட் பண்ணினதும் லீவரை மறுபடியும் அரைவட்டம் போட்டு முன்னாடி கொண்டு வந்து கியர் போடறதுக்கு உபயோகப் படுத்திக்கணும். ஸ்டார்ட் பண்ணிட்டு ஒடனே காலை எடுத்தோம்னா அது பறந்து முன்னாடி போய் கியர்ல விழுந்து வண்டிய அணைச்சுடும். பம்ப் பண்ணி ஒழுங்கா மிதிக்காம Back Fire ஆச்சுன்னு வைங்க. பின்னங்கால் காலி. செண்ட்ர் ஸ்டாண்டு போடறதுக்கு தெனமும் ஜிம்முக்குப் போகணும்! இல்லாட்டி ஸைடு ஸ்டாண்டுதான் பெட்டர்.

இது தவிர ரெட்டைக் குழல் துப்பாக்கி மேலயும் கவனமா இருக்கணும். ‘என்ன மச்சி?’ன்னு குசலம் விசாரிச்சுக்கிட்டே ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டின வண்டி மேல சாஞ்சவனுங்கள்ளாம் காலைச் சுட்டுக்கிட்டது தனிக்கதை.

இளவஞ்சி சொன்னது இது:

//புல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும்//

ரொம்ப சரி.

என்ஃபீல்டு 350 ஸிஸி. யெஸ்டி 250ஸிஸி. இதோட மகத்துவம்லாம் கொடைக்கானலுக்கோ வேற மலைப் பிரதேசங்களுக்கோ வண்டிய எடுத்துட்டுப் போனாக்கா தெரியும். அப்படியே அலுக்காம சலிக்காம ஏறிப் போகும் பாருங்க. 100 ஸிஸில்லாம் பார்த்தா பரிதாபமா இருக்கும். எத்தனையோவாட்டி கொடைக்கானலுக்கு வண்டில போயிருக்கேன். நாங்க பத்து பேரு அஞ்சு வண்டில போவோம். மூணு நாலு ஜாவா, யெஸ்டி இருக்கும். ஒண்ணு ரெண்டு 100ஸிஸி எதாவது வரும். பேரிஜாம் போம்போது டபுள்ஸ் இழுக்காம நண்பனோட 100 ஸிஸி கஷ்டப்பட என் வண்டில ட்ரிபிள்ஸ் போனது ஞாபகத்துக்கு வருது. அன்னிலருந்து அவன் தெருவுல வீலிங் பண்ணி அலட்றத நிறுத்திட்டான். யெஸ்டில வீலிங் பண்ண முடியாதுன்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. அழகா பண்ணலாம். ஆனா அதுக்கு நம்ம அர்னால்டு சிவநேசனுக்குப் பாதியாவாவது இருக்கணும். அந்த டிரிப்ல இன்னொரு நண்பன் ஹீரோ ஹோண்டா 4S-னு நாலு ஸ்ரோக் வண்டிய புதுசா வாங்கி எடுத்திட்டு வந்தான். லிட்டருக்கு 80 கி.மீ.ன்னு போம்போது வயித்தெரிச்சலக் கொட்டிக்கிட்டான். மலைலருந்து இறங்க ஆரம்பிச்சா வத்தலக்குண்டு வரைக்கும் பிரேக்லருந்து காலை எடுக்க முடியாது – இல்லையா? பாதி மலைதான் எறங்கியிருப்போம். திடீர்னு அவன் வண்டி நின்னு போச்சு. என்னன்னு பாத்தா பிரேக் ட்ரம் (அலுமினியம்) இளகி அப்படியே சக்கரத்தோட அச்சுல ஒட்டி ஜாமாயி நின்னுடுச்சு. நான் கீழ போயி ஒரு லாரி மெக்கானிக்கக் கூட்டிக்கிட்டு வந்து அதைச் சுரண்டியெடுத்துப் பிரிச்சு ஒரு மாதிரியா ஓட்டிக்கிட்டு வந்து மதுரை போய் சேர்ந்தோம். டீலர்ட்ட கொண்டுபோய் காட்டினா அவங்க மயக்கமே போடாத கொறை. என் ‘சரிவீஸ்’லயே இந்த மாதிரி பிரச்சினையை இப்பத்தான் பாக்கறேன். ‘விட்டா வெயிலுக்கு உருகிரும் போலக்கே ஒங்க வண்டி’ன்னு அவர்ட்ட சண்டை போட்டு சரிபண்ணி எடுத்துட்டுப் போனான். எதுக்குச் சொல்றேன்னா மைலேஜ் கூட்டறதுக்காக வண்டியை லேசாப் பண்ணி சருகு மாதிரி விக்கிறாங்க. ஆரம்பத்துல 75-80 கி.மீ. தரும்போது சந்தோஷமாத்தான் இருக்கும். ஒண்ணு ரெண்டு வருஷத்துலயே லொடலொடன்னு ஆயி க்ளட்ச் கேபிள் போச்சின்னா கூட செட்டோட மாத்தணும்னு நூத்துக்கணக்குல புடுங்கிருவாய்ங்க. யெஸ்டில க்ளட்ச் கேபிள் தப்பித்தவறி போச்சின்னாக் கூட மாத்தறதுக்கு 10 ரூபாய்தான் ஆகும்.

என்பீல்டுலயும் யெஸ்டிலயும் மிகப்பெரிய விசேஷம் – ஒரு பய ஓசி கேக்க மாட்டான். அப்படியே வீம்புக்குக் கேட்டு எடுத்துட்டுப் போனவங்களைத் தேடி நான் போய் – வேர்க்க விறுவிறுக்கத் தள்ளிட்டு வர்றவங்களைக் காப்பாத்தியிருக்கேன். ‘ஸ்டார்ட்டே ஆகலைடா’ என்பான். நான் அதைத் தடவிக் கொடுத்துத் தாஜா பண்ணி ஒரே மிதில ஸ்டார்ட் பண்ணினதும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ‘ஆள விடு சாமி’ என்று போனவர்கள் அதிகம்!

பெங்களூர்ல 98-ல இருந்தப்ப மதுரைலருந்து யெஸ்டிய எடுத்துக்கிட்டுப் போனேன். அங்க ஓடிக்கிட்டு இருந்த புல்லட் Machimo-வைப் பாத்துட்டுப் பொறாமையா இருந்தது. அழகான டிஸைன் அது. யெஸ்டிலயும் வியாபாரம் தேஞ்சிப் போய் 175-ஸிஸில ஒரு மாடல் விட்டுப் பாத்தாங்க. அது சோனி நாய் மாதிரி யாரும் சீந்தாமப் போனது. 😦

பெட்ரோல் விலையேறிப் போனப்போ மதுரைல நெறய பேரு யெஸ்டில 2:1 விகிதத்துல கெரஸின் அல்லது டீஸலைப் போட்டும் ஓட்டினாங்க. எனக்கு அப்படிச் செய்ய மனசு வர்லை. காசு போனாலும் பரவாயில்லைன்னு கடைசிவரைக்கும் பெட்ரோல்போட்டுத்தான் ஓட்டினேன் – ஓட்டுவேன்.

ராஜ்தூத்னு ஒரு வண்டிய ஓட்டிட்டுப் போவானுங்க பாருங்க. அது என்னங்க வண்டி. இங்கிட்டும் இல்லாம அங்கிட்டும் இல்லாம?

என்னதான் சொன்னாலும் என்ஃபீல்டும் புல்லட்டும் சிவாஜி எம்ஜியார் ரஜினி கமல் மாதிரி. 🙂

காலேஜ்லயும் சரி, வேலை பாக்க ஆரம்பிச்சப்பவும் சரி என்னோட 1984 மாடல் வண்டிதான் என் உற்ற தோழன். அதுல எத்தனையோ எடங்களுக்குப் போயிருக்கேன். மத்த வண்டிங்கள்ளாம் நிறைய ஓட்டினாலும் யெஸ்டி மாதிரி வரவே வராது. இப்ப ஸ்ரீரங்கத்துல தனியா அது நிக்கறத நெனச்சு மனசு கஷ்டமா இருக்கும். என்ன பண்றது. லீவுல ஊருக்குப் போம்போது அதை நல்லா கவனிச்சு ஓட்டுவேன். அதெல்லாம் ஒரு மாசந்தானே. திரும்ப இங்கிட்டு வந்துட்டா அதைக் கவனிக்க நாதி கிடையாது. ஒரு விதத்துல பாத்தா பெத்தவங்களைக் கூட அப்படித்தான் வச்சுருக்கோமோன்னு அடிக்கடி தோணும்.

சீக்கிரம் ஊருக்குத் திரும்பப் போகணும்.

***

Advertisements
பிரிவுகள்:Uncategorized
 1. 8:31 முப இல் ஜூலை 6, 2007

  வாங்க வத்றாப்புக்காரரே,நாங்களும் வத்றாப் வழியா, பிளவக்கல் அணைக்கு புல்லட்டுல போயிருக்கமப்பு!என்பீல்டு புல்லட் புல்லட்டுத்தான்.அது ஒரு தனி சுகம் தான்.ஜாவாவோடு பழக்கமில்லை.

 2. 1:30 பிப இல் ஜூலை 6, 2007

  வெயிலான் அவர்களே (வெயில்னா அது மதுரைதான் – நீங்க மதுரையா?)//நாங்களும் வத்றாப் வழியா, பிளவக்கல் அணைக்கு புல்லட்டுல போயிருக்கமப்பு!//அப்படியா – சொல்லவேயில்லையே! 🙂 ரொம்ப சந்தோஷம். கிழவன் கோவிலைத் தாண்டித்தானே போயிருப்பீங்க. நல்லது.மதுரைலருந்தா போனீங்க?

 3. 4:15 பிப இல் ஜூலை 6, 2007

  ‘வெயில்’ னா ‘விருதுநகர்’னு இப்ப பேர் மாத்திட்டாங்ங. தெரியாதா உங்களுக்கு?கிழவன் கோவில் ஊர்ப்பேர கேள்விப்பட்டிருக்கேன்.

 4. 4:28 பிப இல் ஜூலை 6, 2007

  //’வெயில்’ னா ‘விருதுநகர்’னு இப்ப பேர் மாத்திட்டாங்ங. தெரியாதா உங்களுக்கு?கிழவன் கோவில் ஊர்ப்பேர கேள்விப்பட்டிருக்கேன்.//அது சரி. அங்கிட்டு எல்லா ஊரும் வெயில்தான். 🙂பிளவக்கல் போயிருக்கீங்கல்ல? கூமாப்பட்டிலருந்து நேர போனா கிழவன்கோவில்லதான் முட்டுவீங்க (ஐயப்பன் கோவில் அது). அப்படியே லெஃப்ட் எடுத்து வண்டிய வெரட்டுனீங்கன்னா ரெண்டு மூணு கி.மீ.ல டேம் வந்துரும். மலைக்கு அங்கிட்டு கேரளான்னு சொல்வாங்க. போனதில்லை.

 5. 11:05 முப இல் ஜூலை 7, 2007

  சுந்தர்,ஜாவா மகாத்மியம் அருமையா இருக்கு! 🙂//ஸைலன்ஸர்லருந்து ‘பக் பக்’னு வர்ற காத்து கால்ல படறதை அனுபவிக்கறது அலாதியான விஷயம் // இது அதிவிசேசம்! 🙂// அதை எடுத்துக் கழட்டிப் போட்டதும்தான் வண்டி லேசான மாதிரி மைலேஜ் ரெண்டு கி.மீ. கூட கொடுத்திச்சு. // 🙂// என்னதான் சொன்னாலும் என்ஃபீல்டும் புல்லட்டும் சிவாஜி எம்ஜியார் ரஜினி கமல் மாதிரி. 🙂 // அடடா! அருமையான நினைவலைகள்!

 6. 12:22 பிப இல் ஜூலை 7, 2007

  இளவஞ்சிநன்றிங்க. உங்க பதிவைப் படித்ததனால விளைந்ததே இப்பதிவு. முந்தி நெறய நினைவலைகள் எழுதிக்கிட்டு இருந்தேன். நடுவுல பெரிய இடைவெளி. மறுபடியும் எழுத முயல்கிறேன்.நன்றி. தருமி ஐயாவோட ஜாவா பதிவையும் படித்தேன். வண்டிய வித்துட்டாராமே! 😦

 7. GK
  9:46 முப இல் ஜூலை 11, 2007

  Sundar,neenga Srirangam-a? naanum Srirangam than.

 8. 1:11 பிப இல் ஜூலை 11, 2007

  GK,2001-ல மதுரைலருந்து ஸ்ரீரங்கம் வந்தேச்சு. நான் ஸ்ரீரங்கத்துல இந்த 6 வருஷத்துல மொத்தம் இருந்தது ரெண்டு மாசம்! ஆனாலும் வீட்டுக்காரம்மாவுக்கு திருச்சி. அவங்க பெற்றோரும் ஸ்ரீரங்கத்துல இருக்கறதாலயும், ஒரு காலத்துல முசிறில நான் படிச்சதாலயும் அந்த வட்டாரம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான்.ராஜகோபுரத்துலருந்து கூப்பிடுதூரத்துலதான் வீடு!நன்றி.

 9. 7:10 முப இல் ஜூலை 12, 2007

  நல்ல அனுபவ பதிவு. படிக்க சுகமா இருக்கு

 10. 12:39 பிப இல் ஜூலை 12, 2007

  vathilai muraliஅது ‘வாத்தலை’யா அல்லது ‘வத்திலை’யா? வாத்தலை-ன்னா திருச்சி முசிறி ஏரியாவுல இருக்கற இடம் நினைவுக்கு வருது.நன்றி முரளி.

 11. 2:36 பிப இல் ஓகஸ்ட் 28, 2007

  ஹல்லோ !! ஒரு மோட்டார் சைக்கிள் பற்றி இவ்வளவு விபரமாக படம் வரைந்து பாகங்கள் குறித்து 100 க்கு 100 மதிப்பெண் எடுத்திட்டீங்க – ஜமாய்ச்சுட்டீங்க போங்க !! – அருமையான பதிவு – படித்தேன் – ரசித்தேன் –இன்னிக்கு பூரா – முத்துக்குமரன் சைக்கிள் – இளவஞ்சி என்பீல்ட் – தருமியின் ஜாவா – அப்புறம் உங்க பதிவு தான் – தொடர்க – வாழ்த்துகள் – நன்றி

 12. 4:28 பிப இல் ஓகஸ்ட் 28, 2007

  நெஜமாவே படிச்சி முடிச்சதும் நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா ஒரு பெருமூச்சு வந்திச்சி .. ம்ம்..ம்..பழைய நினைப்புடா பேராண்டி ..அப்டின்னு

 13. 7:41 பிப இல் ஓகஸ்ட் 28, 2007

  நன்றி சீனாஉங்க மூலமா முத்துக்குமரன் பதிவு போய் படித்தேன். அருமையா எழுதிருக்காரு. நானும் சைக்கிள் பத்தி ரெண்டு வருஷம் முன்னாடி எழுதினது நினைவுக்கு வந்தது.

 14. 11:42 பிப இல் ஓகஸ்ட் 28, 2007

  நன்றி தருமி ஐயா//நெஜமாவே படிச்சி முடிச்சதும் நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா ஒரு பெருமூச்சு வந்திச்சி .. ம்ம்..ம்..பழைய நினைப்புடா பேராண்டி ..அப்டின்னு //ரெண்டாவது வரியை நீங்க அடிக்கலைன்னா ‘நல்ல வேளை படிச்சு முடிச்சேச்சு – தப்பிச்சோம்டா’ன்னு பெருமூச்சு விட்டீங்களோன்னு நெனச்சிருப்பேன் 🙂

 15. Anonymous
  11:22 முப இல் செப்ரெம்பர் 20, 2007

  நானும் யெஜ்டி வண்டி ஓட்டியிருக்கேனாக்கும்…. மதுரையில டிவிஎஸ் நகர்ல இருந்து பழங்காநாத்தம் வரை ஓட்டிக்கிட்டு போயி அப்புரம் வண்டி நின்னு போயி என்னோட நன்பன் ஸ்ரீதர் வந்து என்ன காப்பாத்தி கூப்டுட்டு போனான்.. ஸ்ரீதர் வர்ரதுக்குள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் வண்டிய தள்ளுனதுல நாக்கு வெளிய வந்துருச்சி.. ஆனாலும் ஓட்டிட்டு போன ஒரு 2 கிலோமீட்டர் தூரம் ஒரு பெரிய சாதனை செஞ்ச திருப்திய குடுத்துச்சுன்னு சொன்னாக்கூட அது கம்மிதான்.. அப்படியே காத்துல பறந்தேன்.. அதுக்கப்புரம் அந்த வண்டிய பாத்தாலே டரியல் ஆகிகிட்டுருந்தேன் ரொம்ப நாளைக்கு… ( அதுல நீங்க விட்ட சவுண்டு என்னன்னா.. நாங்க உன்னைய சைக்காலஜியிலயே ஓட்ட விடாம பன்னிட்டோம்னு சொன்னதுதான்)ஜெயக்குமார் – தோஹா

 16. 5:35 பிப இல் ஜனவரி 2, 2015

  //பெத்தவங்களைக் கூட அப்படித்தான் வச்சிருக்கோம் //

  குறிப்பிடத்தக்க வார்த்தை சுந்தர். ஆனா எனக்கு இது பற்றி இன்னொரு மாற்றுக்கருத்து உண்டு.

 17. 5:38 பிப இல் ஜனவரி 2, 2015

  // பெத்தவங்களையும் அப்படித்தான் வச்சிருக்கோம் //

  குறிப்பிடத்தக்க வார்த்தை சுந்தர். ஆனா எனக்கு இதுபற்றி மாற்றுக்கருத்தொன்றுண்டு.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: