இல்லம் > Uncategorized > மூன்று வருடங்களுக்குப் பிறகு # 6

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 6

*** மூன்று வருடங்களுக்குப் பிறகு # 5 ***

இந்தியாவில் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக பெருமளவு எண்ணிக்கையில் இருப்பது கால் டாக்ஸி என்று சொல்லலாம் போல. ஆட்டோவில் செல்வதென்றால் இன்னும் சொத்தை எழுதிக் கேட்பதால் Call Taxi இப்போது வீட்டுக்கு வீடு வைத்திருக்கிறார்கள். சொந்த வண்டியையே சும்மா நிற்கும் தருணங்களில் கால் டாக்ஸியாக ஓட்டுகிறார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷன் செல்லவேண்டுமானால் ஆட்டோவில் போனாலும் கால் டாக்ஸியில் போனாலும் ரூ.150 ஆவதால், கால்டாக்ஸியில் வசதிகள் ஆட்டோவைவிட அதிகமிருப்பதால் மக்கள் அதையே நாடுகிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்ததைவிட கிட்டத்தட்ட 100 மடங்கு கால்டாக்ஸிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. வேலைவாய்ப்பும் கணிசமாகப் பெருகியிருக்கிறது. அரும்பு மீசைகூட முளைக்காத இளைஞர்கள் கால்டாக்ஸி ஓட்டி கெளரவமாகச் சம்பாதிக்கிறார்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம்.

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் 90 சதவீதம் கால்டாக்ஸிகளுக்காக விற்கப்படும் மாருதி ஆம்னி வண்டிகளின் மூலமாகத்தான் போலருக்கிறது. 99 சதவீத கால் டாக்ஸிகள் மாருதி ஆம்னிகள். மீதம் டாடா இண்டிகாக்கள். ஆனால் சென்னை மாதிரி இன்னும் திருச்சி கால்டாக்ஸிகளில் மீட்டர் போடுவது அமலுக்கு வரவில்லை. ஆட்டோ அளவு கேட்பதால் மக்கள் ஏறிப் போகிறார்கள். மீட்டர் போட்டால் இன்னும் கட்டணம் குறைவாக வாய்ப்புண்டு. ஆம்னி என்றால் செவ்வக வடிவப் பெட்டி, நான்கு சக்கரங்கள், இஞ்சின், ஸ்டியரிங் சக்கரம், ரேடியோ, டேப், ஸிடி ஏதாவது ஒன்று, இருக்கைகள், பின்னால் சமையல் வாயு உருளைகள் அவ்வளவுதான் மொத்த டாக்ஸியும். வேறு உபரியாகவோ, உதிரியாகவோ எதுவும் இல்லை. எளிமையாக, மலிவாக தயாரித்து விற்றுத் தள்ளுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை கால் டாக்ஸி போல ஆடம்பரங்கள் இன்றி அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. எந்த டாக்ஸியின் கதவைத் திறந்ததும் சமையல் வாயு வாசனை அடிக்கிறது. உள்ளே அமர்ந்து ஒழுங்காகக் கதவை இழுத்து மூடினாலும் ஓட்டுனர் இறங்கி வந்து, ஒரு முறை திறந்து பிறகு அறைந்து இன்னொரு முறை மூடிவிட்டுத்தான் புறப்படுகிறார். எல்லா ஓட்டுனர்களும், திருச்சி, மதுரை, சென்னை என்று எல்லாவிடங்களிலும் சொல்லிவைத்தாற்போல இதைச் செய்வது வினோதமாக இருந்தது!

நதியைச் சார்ந்து வாழும் மக்கள் நிறைந்து செல்லும் நதியைப் பார்க்கும்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுவதைக் கவனித்திருக்கிறீர்களா, நீண்டநாள் கழித்து கடலைப் பார்க்கும் மீனவன் மாதிரி? ஆடிப்பெருக்கு சமயம் – ஜனக்கூட்டத்தில் அம்மா மண்டபம் சாலை ஒற்றையடிப் பாதையாக மாறியிருக்க, வாகனங்களைத் திருவானைக்காவல் வழியாகத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இருசக்கர வாகனத்தில் ‘வீடு அங்கிட்டு சார்’ என்று காவலரிடம் சொல்லிவிட்டு அந்த ஒற்றையடிப் பாதையில் ஜனத்திரளின் ஊடாகச் சென்றோம். ஏராளமான மக்கள். குளித்துப் புத்தாடை உடுத்தி பானைகளைச் சுமந்துகொண்டு. மண்டபத்தின் உள்ளே நுழையமுடியாதபடி கூட்டமிருந்ததால் மாம்பழச்சாலையை நோக்கி விரட்டி பாலத்தில் சென்று நடுவில் நிறுத்தி தடுப்புச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டோம். இடது கரையில் மேலசிந்தாமணியின் படித்துறையும் வலது கரையில் அம்மா மண்டப படித்துறையும் எறும்புகளாக மனிதர்களுடன் இருக்க, மீதியிருக்கும் தென்னை மரங்களையும், புதிய அபார்ட்மெண்ட் கட்டிடங்களையும் தாண்டி ஸ்ரீரங்க கோபுரத்தை இடுப்புக்கு மேலே பார்க்க முடிந்தது.

காவிரி கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்ததும் என்னையறியாமல் எழுந்தது நிம்மதிப் பெருமூச்சு. வருடம் முழுவதும் இப்படி ஓடினால் எப்படி இருக்கும் என்று வழக்கம்போல நினைத்துக்கொண்டேன். வெங்காயத்தாமரைக் கூட்டம் ஒன்று விரைந்து கடந்து பாலத்தின் அடியில் நுழைந்து அப்புறம் சென்றது. பாலத்துக்கு அந்தப் பக்கம் பழைய நடைபாதைப் பாலம் எக்ஸ்னோரா உதவியுடன் தூய்மையாகவே இருந்தது. தொலைவில் ரயில் செல்லும் பாலம். எதிரே மலைக்கோட்டை – வெயிலில் கானல் நீரில் மலைக்கோட்டைப் பாறை நெளிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் எல்லாம் அப்படியே மாறாதிருப்பதுபோன்ற பிரமை. அருகில் நெருங்கிப் பார்த்தால்தான் அழுக்குகளும், அழிவுகளும் தென்படுகின்றன போலும்!

இங்கே State Parks எனப்படும் பெரிய பெரிய பூங்காக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய உண்டு. பெரிய ஏரியுடன் ஏராளமான மரங்களுடன், தாராளமான புல்வெளிகளுடன், இரண்டுமான மங்கைகளுடன், குழந்தை குட்டிகளுடன் உண்டு. வாரயிறுதிகளில் குடும்பத்துடன் சென்று காலாற நடந்து, உண்டு, களைத்து, உறங்கி, விளையாடி, படகுச் சவாரி செய்துவிட்டு மாலையில் உற்சாகமாக வீடு திரும்பிவிடலாம். வண்டிக்கு நுழைவுக்கட்டணம் $5. படகுச் சவாரி செய்தால் $15 டாலர். “பிக்னிக் எங்கே போலாம்?” என்று கேட்டதற்கு நண்பர்கள் திருதிருவென்று முழித்தார்கள். சினிமாவைத் தவிர பெரிய பிக்னிக் எதுவும் நம் ஜனங்களுக்கு இல்லை என்பது சோகம். முக்கொம்புவைத் தவிர வேறு எதையும் குழந்தைகளுக்கான இடமாக அவர்களால் சொல்லமுடியவில்லை. சிங்காரத் தோப்பைக் கடந்து கொஞ்சம் ஜன, வாகன சமுத்திரத்தில் நீந்தினால் சாலையின் நடுவே நந்தி போன்று பூங்கா (என்ற பெயரில்) ஒன்று இருக்கிறது. உள்ளே முட்புதர்கள் மண்டிக்கிடக்க கதவுப் பூட்டப்பட்டு துருவெறிக் கிடக்கிறது. இரவில் மக்கள் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்கள். சட்டவிரோதக் காரியங்களும் நடக்கின்றன. கோவையில் காந்தி பூங்கா பரவாயில்லாமல் இருக்கும் (ரொம்ப காலத்துக்கு முன்பு. இப்போது எப்படி என்று தெரியவில்லை). சென்னையில் நடேசன் பார்க் என்று இணையர்கள் மாநாடெல்லாம் அடிக்கடி நடந்து கலகலப்பாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். பார்த்ததில்லை. மதுரை என்ற கந்தக பூமியில் பூங்காக்கள் அங்கங்கே இருந்தாலும் வைரமுத்து பாணியில் சொல்லப்போனால் அங்கு ஐஸூக்கும் வேர்க்கும்!

சிந்தாமணி ஸ்ரீரங்கத்துக்காரர்களுக்கு காவிரிப் பாலம்தான் பிக்னிக் ஸ்பாட். மாலை ஆறுமணியளவில் பானிபூரித் தள்ளுவண்டிக் கடைகள் விளக்கேற்றிக்கொள்ள, சாரிசாரியாக வருகிறார்கள் மக்கள். வண்டியை அப்படியே ஓரமாய் நிறுத்திவிட்டு காவிரியை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். வீசும் சன்னமான காற்று ஒன்றுதான் அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே ஆறுதலாய்த் தோன்றியது. இளைஞர்கள், புதிதாய்க் கல்யாணமான தம்பதிகள், வயதான ஒற்றையாட்கள், பிச்சைக் காரர்கள் என்று கதம்பமாய் மக்கள் கூட்டம் பாலம் முழுதும் விரவியிருக்கின்றனர் – எல்லா மாலை வேளைகளிலும். அவ்வப்போது விளக்குப் புள்ளிகளுடன் தடதடத்துச் செல்லும் ரயிலைப் பார்த்து ஆரவாரமிடுகின்றன குழந்தைகள். மலைக்கோட்டை உச்சியிலும் பிள்ளையார் கோவிலின் விளக்கு வரிசை பாம்பு மாதிரி நீள்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் மஞ்சள் ஒளியில் மனமாச்சரியங்களெல்லாம் கரைந்து அலுப்பு தீர்வது போலத் தோன்றுகிறது. காவிரியோரத்தில் நீளமாக மக்கள் இளைப்பாறி பொழுதுபோக்கும் வண்ணம் பூங்காக்களை நிறுவினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது – கூடவே சலிப்பும்!

பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்கையில் பாலம் அதிர்வதை உணர முடிகிறது. பாலத்தில் கண்களை மூடிச் சில நிமிடங்கள் காற்றை அனுபவித்து நின்றுகொண்டிருக்கும்போது மண்டைக்குள் யாரோ பேசுவது போலக் கேட்க விழித்துப் பார்த்தேன். பாலத்தின் அந்தப் பக்கத்தில் ஜெயலட்சுமி டீச்சர் நிற்கவில்லை. வா என்ற கூப்பிடவில்லை! ஆ!

இன்னும் வரும்…

***

நன்றி தென்றல்.காம்

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: