இல்லம் > Boston, Healthcare, MA, Martha Coakley, Obama, Scott Brown, Ted Kennedy > 60-வது சீட்டு!

60-வது சீட்டு!

ஜன-20, 2009 என்ற தேதி முதன்முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் அமெரிக்க ஜனாதிபதியான நிகழ்வினால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. தங்களது ஓட்டுகளினால் அதை வரலாற்று நிகழ்வாக ஆக்கிய அமெரிக்க மக்களே, அதே ஓட்டு என்ற ஆயுதத்தால் சரியாக ஒரு வருடம் கழித்து ஜன-19, 2010-இல் நடந்த தேர்தலில் வேட்டு வைத்துவிட்டார்கள்.

மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் சகோதரர்களில் ஒருவரான ட்டெட் கென்னடி என்று அழைக்கப்படும் எட்வர்ட் எம். கென்னடி ஜனநாயக்கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்க செனேட் சபைக்கு மாஸசூஸட்ஸ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பல வருடங்களாக பணியாற்றியவர். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் அவர் மரணமடைந்ததும் காலியான அவரது பதவியை எளிதில் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று இறுமாந்திருந்த ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் பலத்த குட்டு வைத்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட அறுபதாக ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் கட்டுக்குள் இருந்த தொகுதியை எதிர்க் (குடியரசுக்) கட்சியின் சார்பாக நின்ற ஸ்காட் ப்ரவுன் பறித்து அமெரிக்கா முழுவதும் அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு செனேட் சீட்டுக்கு நடந்த தேர்தலாகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

ஒபாமா பதவியேற்று ஒருவருட காலத்தில் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மிகப் பெரிய பிரச்சினைகள் – கடந்த நாற்பதாண்டுகளில் வேறு எந்த அதிபரும் சந்தித்திராத பிரச்சினைகள். அதீத உயரத்தின் உச்சியிலிருந்து உடைந்து விழுந்த பொருளாதாரத்தினால் மொத்த அமெரிக்காவும் தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவதொரு வங்கி திவாலாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சபட்ச அளவாக 10%-க்கும் மேல் எகிறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்றைக்கு மிகப்பெருமளவில் தொழிலாளர்களைக் கொண்ட Wal-Mart போன்ற பல்பொருள் அங்காடிகள் 11,000 பேரை வேலைநீக்கம் செய்வதாகவும் பல கிளைகளை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. லட்சக்கணக்கான வேலைகள் காலியாக வேறு வேலை கிடைக்காமல் நடுவீதிக்கு வராத குறையாக அமெரிக்கர்கள் திண்டாடுகிறாரக்ள். வீடு, மனை, நில விற்பனையோ அதல பாதாளத்தில். தினமும் கோடிக்கணக்கில் செலவாகும் ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள். அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் வேறு. கடும் முட்கள் நிறைந்த அதிபர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் ஒபாமா! ”அனுபமில்லாதவர், வாய்ச்சொல்லில் வீரர்” என்று அனுதினமும் எதிர்க்கட்சி அவரைப் போட்டுத் தாளித்துக்கொண்டிருக்க, பில் ஓரெய்லியும் ஹானிட்டியும் க்ளென் பெக்கும் ஃபாக்ஸ் சானலில் தினமும் அவரைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா, ஜனநாயகக்கட்சியனரின் ஒவ்வொரு அசைவும் உருப்பெருக்கிக் கண்ணாடிகொண்டு ஆராயப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் அசுரத்தனமான பொருளாதார இயந்திரம் ஆங்காங்கு ஆட்டம் கண்டு இயங்க முடியாமல் தத்தளிப்பதைத் தடுத்து மீட்டெடுக்க கடந்த ஓராண்டாக ஒபாமா எடுத்த பல நடவடிக்கைகளும் – பெரும் வல்லுநர்களின் ஆலோசனைகள்கூட – உதவவில்லை. லட்சக்கணக்கான கோடிகளை நீராய் இறைத்துப் பார்த்துவிட்டார்கள் – ஒரு பிரயோஜனமும் இல்லை. வேலைவாய்ப்புகள் பெருகி, வேலையிழப்புகள் குறைந்திருக்கின்றன என்று வெள்ளை மாளிகை கணக்கு காட்டினாலும் – பெரிதாக ”மாற்றம்” ஏதும் நிகழாததால் அமெரிக்க மக்கள் பொறுமையிழக்கத் துவங்கிவிட்டார்கள்.

அமெரிக்கா ஒரு அசுர சக்தி என்றால் அந்த அசுர சக்தி தன்னகத்தே உட்கொண்டிருக்கும் ராட்சத பற்சக்கரங்களில் ஒன்று இந்த Healthcare என்பது. மருத்துவக் காப்பீடு இல்லாத மனிதன் பிணத்திற்குச் சமானம். கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத அளவு இங்கு மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவு மிகமிக அதிகம். உலகிலேயே மருத்துவக் காப்பீடுக்கு மக்கள் அதிகமாகச் செலவழிக்கும் நாடு அமெரிக்காதான். ஆனாலும் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்ல வேலையிழப்புகளினால் மருத்தவக்காப்பீடுகளும் தொலைந்து போக, காப்பீடு இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் திண்டாடுகிறார்கள். இது சாதாரண பிரச்சினையல்ல. இங்கு யாரும் யாரையும் எதற்காகவும் எப்போதுவேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு இழுக்கலாம். America is a country of Law – என்பார்கள். எதெதற்கு வழக்கு போடுவது என்று நம்மால் கற்பனை செய்ய முடியாத விஷயத்துக்கெல்லாம் வழக்குப் போட்டு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு வாங்குவார்கள். மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல. வழக்குகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக மருத்துவத் துறையில் இருப்பவர்கள் (மருத்துவர்களிலில் தொடங்கி கிட்டத்தட்ட எல்லாரும்) காப்பீடு எடுத்துக்கொள்வதற்காகச் செலுத்தும் காப்பீட்டுத் தவணை மிக மிக அதிகம். அதை எங்கிருந்து எடுப்பார்கள்? மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணங்கள் மூலமாகத்தான். ஒவ்வொரு நோயாளியும் அந்த அளவு கட்டணங்களை தத்தமது வருமானத்திலிருந்து செலுத்துவது என்பது சாத்தியமேயில்லை என்பதால் ஒவ்வொருவரும் மருத்துவக்காப்பீடு இருக்கவேண்டியது மிக அவசியம். நோயாளிகள் செலுத்தும் காப்பீட்டுத் தொகை வருமானத்திலிருந்து அவர்களின் சிகிச்சை செலவுகளை மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் செலுத்துகிறது. வழக்குகளிலிருந்து பாதுகாக்க மருத்துவமனைகளி பெரும் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றன. வழக்கு நடத்துவதற்காக பெரும் தொகையை வழக்குரைஞர்கள் வசூலிக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் நோயாளிகளும் மருத்துவர்களும் வழக்குரைஞர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய இரண்டு ராட்சதர்களின் பிடியில் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. இந்தப் பிரச்சினையை இன்னும விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாவல் அளவுக்கு எழுத வேண்டியிருக்கும்.

இதற்கு முன் பில் கிளிண்ட்டன் அதிபராக இருந்தபோது பிரஸ்தாபிக்கப்பட்டு ஹிலாரி கிளிண்ட்டன் கடுமையாக முயற்சி செய்து கரை சேராமற்போன ”Health care reform” என்ற உடல்நலம் குறித்தான மசோதாவை நிறைவேற்றியே தீருவேன் என்று பதவிக்கு வந்தது முதல் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் ஒபாமா சம்பாதித்துக்கொண்டு எதிரிகள் ஏராளம். சிறுபான்மையாக ஒரு பகுதி மக்கள் காப்பீடு இல்லாமல் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லாடுவது முக்கியமான பிரச்சினை என்றாலும் தற்போதைய பொருளாதார நிலையில் வேலையிழப்புகளினாலும், பாடுபட்டுச் சேர்த்த சேமிப்புகள் கண்முன்னே வங்கிகள் திவாலாவதினால் கரைந்து காணாமல் போவதாலும் மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதையுணர்ந்து Healthcare Reform மசோதாவை அவர் சற்று கழித்து கையிலெடுத்திருக்கலாம். ஒரு வாளித் தண்ணீர் கொண்டு ஒரு தெரு முழுதும் பற்றியெரியும் தீயை அணைக்க முடியுமா? ஆரம்பத்தில் அட்டகாசமாகத் துவங்கிய ஒபாமாவின் அரசியல்பயணம் இப்போது ஆட்டங்காணத் துவங்கிவிட்டதன் அறிகுறியை ஸ்பாட் ப்ரவுனின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.

எல்லாருக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒபாமா கொண்டு வந்த மசோதாவுக்கு செனேட் சபையின் ஒப்புதல் வேண்டும். நம்மூர் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மசோதாக்களை நிறைவேற்றுகிறார்களே – அதே போலத்தான். ஜனநாயகக் கட்சிக்குத் தேவை 60 ஓட்டுகள். 59 ஏற்கெனவே கிடைத்துவிட, 60-வதாக மசோதாவை ஆதரித்தவர் மறைந்த ”டெட்” கென்னடி (Dead கென்னடியல்ல – dead-ஆன Ted கென்னடி!).

கென்னடியின் சீட்டைப் பிடிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தியது மார்த்தா கோக்லி (Martha Coakley)யை. குடியரசுக் கட்சி சார்பாக நின்றவர் ஸ்காட் ப்ரவுன் (Scott Brown). இரண்டு மாதம் முன்பு வரை ஸ்காட் ப்ரவுன் மார்த்தாவைத் தோற்கடித்துவிடுவார் என்று அவரே கனவு கண்டிருக்க மாட்டார். ஒபாமாவே பாஸ்டனுக்கு வந்து மார்த்தா கோக்லிக்காகப் பிரச்சாரம் செய்தும் தோல்வியடைந்தது ஒபாமாவுக்கான மிகப்பெரிய எச்சரிக்கை மணி! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் முடிந்து ”It’s all Bush’s fault” என்ற ஜனநாயகக் கட்சியின் ”தினமும் நான்கு காட்சிகள்” எல்லாம் ஓடி முடிந்து – இமாலய பிரச்சினைகள் எதுவும் தீர்கிற வழியெதுவும் காணாததால் பொறுமையிழக்கத் தொடங்கிய மக்கள் பலமாக அடித்த அபாய மணி அது. Health care reform மசோதாவைக் கொண்டுவந்தால் இன்னும் பல ட்ரில்லியன் டால்கள் கடனுக்கு அமெரிக்கா ஆளாக நேரிடும் என்று குறிப்பிட்டு அதைத் தீவிரமாக எதிர்ப்பது குடியரசுக் கட்சி (ஜனநாயகக் கட்சியிலேயே இம்மசோதாவை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்). மசோதாவைத் தோல்வியடையச் செய்ய அவர்களுக்குத் தேவை நாற்பது ஓட்டுகள். இருந்தது முப்பத்தொன்பது. மசோதா வெற்றிபெறச் செய்ய ஜனநாயகக் கட்சிக்குத் தேவைப்பட்டது 60 ஓட்டுகள். இருந்தது 59 ஓட்டுகள். இம்மாதிரி திரிசங்கு சொர்க்கத்திலிருந்த இரு கட்சிகளுக்கும் கென்னடியின் சீட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கவேண்டியதில்லை. இவ்வளவு அதிமுக்கியத் தேர்தலை Taken for granted என்ற ரீதியில் எதிர்கட்சியையும் அதன் வேட்பாளரையும் மிகவும் குறைவாக எடைபோட்டு அதி சாதாரணமாக ஜனநாயகக் கட்சியனர் கையாண்டது அசல் பைத்தியக்காரத்தனம். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்ட கதைதான். ஜனநாயகக் கட்சி என்ற யானை தலையில் அல்ல – தன் கண்களில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது.

ஜனநாயகம் மலிவான, எளிமையானதொரு விஷயமல்ல என்பதை அமெரிக்கா தேர்தல்களுக்குச் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் தெரியும். மக்களுக்கு வேட்டி, சட்டை, சேலை, டிவி என்று இலவசங்கள் எதுவும் கொடுப்பதில்லையே தவிர, அவர்கள் மற்ற எல்லாவற்றுக்கும் செய்யும் செலவைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கம் வரும்.

தேர்தல் செலவுக்காக ஸ்காட் ப்ரவுன் போட்டுவைத்திருந்த உண்டியல் பட்ஜெட் ஒரு மில்லியன் டாலர்கள் மட்டுமே. கருத்து கணிப்புகளில் முன்னணியிலிருந்த மார்த்தா கோக்லிக்கு ஜனநாயகக் கட்சி அள்ளியள்ளி செலவழித்தது. மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொள்ளாமல் கட்சியின் பிரச்சாரங்களை அறிவிக்கும் பீரங்கி போல விட்டேற்றியாக நடந்துகொண்டார் மார்த்தா. பாஸ்டன் தவிர புறநகர் பகுதிகளில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இந்தப் பக்கம் ஸ்காட் ப்ரவுன் மக்கள் மனதில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி தனது தேர்தல் பிரச்சாரத்தை அமைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பம்பரமாகச் சுற்றி மக்களைச் சந்தித்துப் பேச, இருவருக்கும் இருந்த வாக்கு வித்தியாசங்கள் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கணிசமாகக் குறைந்து நான்கைந்து சதவீதமே ஸ்காட் ப்ரவுன் பிந்தியிருக்க அவரின் குடியரசுக் கட்சி புருவம் உயர்த்தி “நம்மாள் ஜெயித்துவிடுவார் போலருக்கே” என்று பார்த்தது. அதன்பிறகு கடைசி மூன்று வாரங்களில் மாநிலத்திற்குள் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்காட் ப்ரவுனுக்கு வந்து குவிந்த தேர்தல் நிதி மட்டும் பதிமூன்று மில்லியன் டாலர்கள்! அதில் பெரும்பணம் இணையத்தின் மூலமாக வந்திருக்கிறது. மனிதர் காட்டில் மழை! அவர் அதைச் சரியான முறையில் அவரது பிரச்சாரங்களை ஒலி, ஒளி பரப்பப் பயன்படுத்திக் கொண்டார். மார்த்தா மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுக்காமல் அதற்கான தீர்வுகளை முன்வைக்காமல் பிலாக்காணம் பாடுவது மாதிரி ஸ்காட் ப்ரவுன் பற்றிய எதிர்மறை விளம்பரங்களை வெளியிட, ஸ்காட் ப்ரவுனின் விளம்பரங்களில் அவர் எளிமை உடையில் அவரது GMC வாகனத்தில் தெருத்தெருவாகச் சுற்றி வாக்காளர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை செனேட் சபையில் எடுத்துரைப்பேன் என்று உறுதியளித்து அவர்களது மனங்களை வென்றார். கடைசி நேரத்தில் மக்கள் ஆதரவு குறைவதை உணர்ந்தார்களோ என்னவோ, தோல்வியைத் தவிர்க்க ஒபாமாவையே நேரடியாக பாஸ்டனுக்கு வரவழைத்து மார்த்தாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யச் செய்தார்கள் – மிகவும் காலதாமதமான இந்நடவடிக்கைகளினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை.

இறுதியில் மக்கள் குரல் வென்றது. இந்த வெற்றி தனிக்காட்டு ராஜாவாக வேகநடை போட்டுக்கொண்டிருந்த ஒபாமா யானையின் காலில் சங்கிலியைப் பிணைத்திருக்கிறது. Obamacare என்று விமர்சிக்கப்பட்ட அம்மசோதா இப்போதைக்கு நிறைவேற வழியில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொருளாதாரம் மீண்டு எழும்வரை பெரும் செலவு வைக்கும் அம்மாதிரி மசோதாக்கள் எதுவும் எடுபடாது, நிறைவேறாது என்பதை மக்கள் அவர்களது ஓட்டின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். இனிமேல் ஜனநாயகக்கட்சியினரும், ஒபாமாவும் Healthcare reform விஷயத்தை அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வருடமும் இனிவரும் வருடங்களிலும் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் அவரது மறுதேர்தலை நிர்ணயிக்கப்போகிறது. ஒருபானை சோற்றுக்கு இத்தேர்தலை ஒரு பதமாக அவர் எடுத்துக்கொள்வார் என்று நம்புவோம்.

நேற்றே ஒரு அறிக்கையில் அரசு செலவினங்களை அடுத்த மூன்றாண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருக்கிறார். இன்று இரவு ஒன்பது மணிக்கு State Union Address என்று குறிப்பிடப்படும் மிக முக்கிய உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றவிருக்கிறார். அதிபர் பதிவிக்கு வந்ததும் ஒபாமா ஆற்றப்போகும் முதல் State Union Address இதுதான். அளவுகடந்து வரையறையில்லாது ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் ஆகாயத்தைத் தொடும் செலவினங்களை அவர் எவ்வாறு கட்டுப்படுத்தி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை மக்களுக்கு விளக்குவது உரையின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அரசியல் நோக்கர்கள் உரையின் சாராம்சமாகக் கணிப்பது ”மாஸசூசட்ஸ் மக்களே – உங்கள் குரல் என் காதில் விழுந்தது” என்பதைத்தான்.

****

Advertisements
பிரிவுகள்:Boston, Healthcare, MA, Martha Coakley, Obama, Scott Brown, Ted Kennedy
 1. 4:33 பிப இல் ஜனவரி 30, 2010

  வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்.. அமெரிக்கா இன்னும் நிமிர்ந்து நிற்க பலகாலம் ஆகும்போலத் தெரிகிறது.. இனிமேலும் செலவைப் பற்றிப்பேசினால் அமெரிக்க மக்கள் அடிக்க வரலாம்..

 2. 11:35 முப இல் மார்ச் 7, 2010

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: