இல்லம் > Uncategorized > தாய் மன்னே வனக்கம்!

தாய் மன்னே வனக்கம்!

நேற்று (நவ-10) இங்கு Veterans Day அனுசரிக்கப்பட்டது. நிறைய வெட்கமாகவும் அவமானமாகவும் உணர்ந்த நாள்!

நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவர்களை Veteran என்று குறிப்பிடுவது வழக்கம். பள்ளிகளுக்கு விடுமுறை. அரசு விடுமுறையும்கூட என்று நினைக்கிறேன். பணி நிமித்தமாக அட்லாண்டா போக வேண்டியிருந்ததால் காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குக் கிளம்பி ஏழு மணி விமானத்தைப் பிடிக்கப் போனேன் – பொதுவாகவே அமெரிக்கத் தேசியக்கொடி நிறைய இடங்களில் பறக்கும். கொடியை பலவிதமாக அலங்காரமாகப் பயன்படுத்துவார்கள் – தொப்பி, உடை, முகப்பூச்சு, சிகையலங்காரம் என்று பல வகை – இவையெல்லாம் ஜூலை நான்காம்தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் எல்லா நகரங்களிலும் (எல்லா சுதந்திர நாடுகளிலும்) நடப்பவைதான்.

விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களெதுவுமின்றி பெரிய அளவு கொடிகளை ஆங்காங்கே வைத்திருந்தார்கள். விமானம் அட்லாண்டா ஓடுதளத்தைத் தொட்டு இறங்கியதும் வழக்கமான வரவேற்பு அறிவிப்பு, உள்ளூர் தட்பவெப்பம், பெட்டிகளை எந்த கரோஸலில் எடுத்துக்கொள்வது என்பதைத் தெரிவித்துவிட்டு முடிக்கையில் ”இன்று Veterans தினம். நாட்டுக்காகப் சேவை புரிந்த, புரியும் அவர்களுக்கு நன்றிகள். இந்த விமானத்தில் யாராவது Veterans இருக்கின்றீர்களென்றால் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள், வந்தனங்கள், நன்றிகள்” என்று குறிப்பிட பயணிகள் கைதட்டினார்கள். அப்போதுதான் இந்த தினம் நினைவு வந்தது. திரும்ப நள்ளிரவு விமானத்தில் பாஸ்டனுக்குத் திரும்பி இறங்கியதும் அதேமாதிரி நன்றி தெரிவித்தார்கள். அந்த அறிவிப்பு என்னை சில வினாடிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.

ஈராக் போன்ற தேசங்களிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் ஊர் திரும்பும்போது விமானநிலையங்களில் அவர்களைப் பார்த்ததும் மற்ற பொதுமக்கள், பயணிகள், விமான நிலையச் சிப்பந்திகள் என்று அனைவரும் அவர்கள் கடந்து செல்லும்வரை கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பலமுறை, பல விமான நிலையங்களில் பார்த்திருக்கிறேன். அது பொதுமக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒரு லாபநோக்கோடு இயங்கும் விமான நிறுவனத்தில், விமானத்தில் சேவையாளர்கள் தினத்தை நினைவுகூர்ந்து நன்றி அறிவிப்பு செய்தது எனக்குள் பல கண்களைத் திறந்தது. நாங்கள் வசிக்கும் ஊரில்கூட வாழும் முன்னாள் ராணுவத்தினரை வரவேற்று மக்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறியவர்களுக்கு, இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி எல்லாரும் “நன்றி” சொல்லி கைதட்டிப் பாராட்டினார்கள்.

நம்மூரில் “பட்டாளத்தான்” என்று கிராமங்களில் அவர்களை அழைப்போம். மிடுக்கோடு இருப்பார்கள். ஆனால் நகரங்களில்? ”முன்னாள் ராணுவத்தினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டு – நாட்டுக்குச் சேவை செய்த, செய்யும் ராணுவ வீரர்களை எப்படி நடத்துகிறோம்?. தமிழ்ச் சினிமாக்களில் முழுச் சீருடையுடன் ராணுவ வீரர் அத்தை மகளைப் பார்க்க வருவதையோ, காதல் செய்வதையோ அல்லது ஊர்க்காரர்களுடன் தகராறு செய்வதையோ காட்டுகிறார்கள். நேரில் பார்த்தால் சகாய விலையில் மிலிட்டரி கேண்ட்டீனில் சாராயம் (ரம்) கிடைக்குமா போன்ற விசாரிப்புகளைக் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

வற்றாயிருப்பு வீட்டில் குடும்பத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த யாரோ ஒரு மாமா கொண்டு வந்த சுருட்டிய தோல்படுக்கை – அதற்கு ஏதோ ஒரு பெயர் சொல்வார்கள் – ஆங்.. ”ஹோல்டால்” – ரொம்ப வருடங்களாப் பரணில் இருந்தது. மற்றபடி ஊரிலோ, பள்ளியிலோ, கல்லூரிகளிலோ அல்லது வேலைசெய்த இடங்களிலோ எப்போவது ராணுவச் சேவையாளர்களைப் பற்றி பேசியிருக்கிறோமா என்று எவ்வளவு யோசித்தும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அவர்கள் எல்லையில் நடுங்கும் குளிரில், பனிப்பொழிவில், மழையில் எவ்வளவு துன்பப்பட்டு நாட்டைக் காக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு வெயிலில் நமக்கு உறைப்பதே இல்லை. தேசப்பற்று என்பது ஏட்டளவில்தான் என்று சொல்லவேண்டியிருக்கிறது.

NCC என்றொரு அமைப்பு. பள்ளியில் படிக்கும்போது அதில் சேரலாம் என்று போனால் முட்டி ஒட்டுகிறது என்று துரத்தி விட்டார்கள். கஞ்சி போட்டு விறைப்பாக நிற்கும் (ஏன் அப்படி “அந்த இடத்தில்” புஃப்பென்று இருப்பது மாதிரி ட்ரவுசர் மாடலை வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து வெட்கமடைந்திருக்கிறேன்) காக்கி ட்ரவுசர், முட்டி வரை சாக்ஸ் போட்டு, தேய் தேய் என்று பிரஷ்ஷால் தேய்த்துப் பளபளப்பாக்கிய கல்போன்ற காலணி, ஒருக்களித்துச் சரிந்திருக்கும் தொப்பி. சிவப்புக் குஞ்சலம் ஒன்று அதில் இருக்கும். முழுக்கையைச் சுருட்டி முழங்கைக்கு மேல் ஏற்றிவிட்டுக்கொண்டு NCC மாணவர்கள் அதிகாலையில் கவாத்து பழகுவதை வேலிக்கு அந்தப் பக்கம் நின்று சோகமாக வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஆண்டவன் ஏன் கப்பைக் கால்களைக் கொடுக்கவில்லை என்று வருந்தியதெல்லாம் நினைவிலிருக்கிறது. பிறகு இலுப்பைப் பூ சக்கரையாக NSS-இல் வெண் சீருடையுடன் சேர்ந்து மதுரைப் பெரியார் நிலைய சந்திப்பில் புகையில் மூச்சு திணறிக்கொண்டு வாகனச் சத்தங்கள் காதைப் பிளக்க போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது – NSS மாணவிகள் STOP காட்டினால் மட்டும் நிற்பார்கள் – நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை; திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது; அவ்வளவுதான் – வியர்வைகூட அவ்வளவாகச் சிந்தாத தேசசேவை!

சுதந்திர தினம் என்றால் தேசியகீதம் பாடி, சட்டையில் கொடியைக் குத்திக்கொண்டு மிட்டாய் தின்றுவிட்டு, நாள் முழுதும் வீட்டில் நடிகையர்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜனகனமனவை மொணமொணவென்று சம்பிரதாயமாகப் பாடுவதைத் தவிர ஒரு முறையாவது தேசத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு வாயார “நன்றி” என்று சொல்லியிருக்கிறோமா என்று யோசித்து வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.

எல்லாமே சுதந்திரம் வாங்கியதோடு முடிந்துவிட்டது என்ற நினைப்பில் நிகழ்காலச் சேவையாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இல்லை கார்கில் போன்று ஏதாவது நிகழும்போதுதான் ஆளாளுக்கு தேசப்பற்று தேசப்பற்று என்று மாரடித்துக்கொள்கிறோம். அதாவது Fire Extinguisher-இன் மதிப்பு தீ பற்றிக்கொண்டு எரியும்போது தெரிவது போல!

திராவிடன், ஆரியன், பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று அரசியல் செய்துகொண்டு, காவிரிக்காக அடித்துக்கொண்டு மலையாளத்தான், கன்னடத்தான், தெலுங்கன் என்று பிரித்துக்கொண்டு வானம் பார்த்த பூமியாக மாநிலத்தை ஆக்கியதைத் தவிர நமது கட்சிகளும் தலைவர்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் என்னதான் சாதித்தார்கள் என்று எண்ணங்கள் ஓடியது. ஈராக் போர் தவறான முடிவாக இருந்தாலும் – அங்கு ராணுவம் சென்றதைத் தீர்மானித்தது தேசத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் – சாதாரண ராணுவ வீரர் அல்ல. அவர்களுக்குக் கற்பிக்கபட்டது, படுவது உயரதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், செல் என்றால் செல்வது, சுடு என்றால் சுடுவது, போர் புரியச் சொன்னால் புரிவது. சொந்த நம்பிக்கைகளையும் சரி தவறு என்ற விவாதங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டுக்காகச் செல் என்றால் கேள்விகேட்காமல் செல்ல வேண்டும்.

புஷ்ஷின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்கும் அதே வேளையில், அங்கு சென்றுவிட்டுத் திரும்பும் ராணுவத்தினரை “நாட்டுக்காகச் சென்றார்கள்” என்ற ஒரே அடிப்படையில் வேண்டிய மரியாதைகளைக் கொடுத்து வரவேற்றுப் பாராட்டத் தவறுவதேயில்லை இம்மக்கள். இந்த தெளிபு நம்மிடையே இல்லை. நம் ராணுவத்தின் தியாகங்கள் நமக்குப் புரிவதில்லை. அமெரிக்க மக்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரரை எப்படி மரியாதையாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடத்தப்பட்ட விதம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களை வரவேற்காது புறக்கணிப்பு செய்தார் அன்றைய, இன்றைய மாநில முதல்வர் கருணாநிதி. மக்களுக்கு எப்படிப்பட்ட உதாரணம்! அமைதிப்படை அனுப்பப்பட்டது தவறு என்று அவர் நினைத்தால் இங்கு புஷ்ஷை வறுத்தெடுப்பதுபோல நம் படையை அனுப்ப முடிவுசெய்த பிரதமரையும் அவர் சார்ந்த கட்சியையும் அல்லவா புறக்கணித்திருக்கவேண்டும்? அக்கட்சியுடன் இன்று வரை கூடிக் குலாவிக்கொண்டுதான் திமுக இருக்கிறது. ஆக தமிழ்ப் பற்றும் இல்லை, தேசப் பற்றும் இல்லை. கட்சிப் பற்று – பதவிப் பற்று – அதனால் கிடைக்கும் பலன்களின் மீதான பற்றுதான் முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது. இப்படிச் சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் நம் தலைவர்களால் எப்படிப்பட்ட சமுதாயங்கள் உருவாகியிருக்கின்றன என்றும் தேசத்தின் மீது எம்மாதிரி பற்றுதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் எண்ணிப் பார்த்தேன்.

குடும்பம், குழந்தைகள், சுற்றம், சுகங்களைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து கண்காணாத தொலைவில் மொழி புரியாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கொட்டும் பனியில், பனி மலைகளில் எதிரிகள் ஊடுருவாதவண்ணம் கண்காணித்து, அவர்களின் எதிர்பாராத தாக்குதல்களைத் தடுத்து, துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகி, தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சும்பத் தனமாக அரசுகள் அளிக்கும் பிச்சைக்காரச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து, ஊருக்கு வந்து சேர்ந்து, பிறகு மீதி வாழ்க்கையைத் தொடர பணத்தில் புரளும் வியாபார நிறுவனங்களின் பளபள கட்டிடங்களுக்கு வெளியேவோ, புதிதான அபார்ட்மெண்ட் கட்டிட மூலையில் இருக்கும் ஐந்துக்கு ஐந்து அறையிலோ, வெயிலிலும், இரவுகளிலும் “செக்கூரிட்டியாக” காவல்நாய் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும், யாரும் கண்டுகொள்ளாத தேசச் சேவை புரிந்த, புரிந்துகொண்டிருக்கும் அந்த உத்தமமான மனிதர்களுக்கு, நல்ல ஆத்மாக்களுக்கு – “எக்ஸ்-ஸர்வீஸ்மென்களுக்கு” நெஞ்சார்ந்த நன்றிகள், வணக்கங்கள்!

***

நன்றி தென்றல்.காம்

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. 4:41 முப இல் ஜூலை 12, 2011

    அருமையான பதிவுக்கு நன்றி.

  2. 4:41 முப இல் ஜூலை 12, 2011

    தொடர

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: