இல்லம் > Uncategorized > ஆப்பிள் முகம்

ஆப்பிள் முகம்

நள்ளிரவு இருக்கும். “உலகமே வாங்கிக்கிட்ருக்கும்போது இன்னிக்கு வரைக்கும் ஐஃபோன் வாங்காம இருக்கியே? நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று நடிகர் விஜயகுமார் வேட்டி கை-பனியனுடன் வயிற்றை எக்கிக் கைநீட்டிக் கத்தியதும், மிரண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.

ரொம்ப வருடங்களாவே ஆப்பிள் நிறுவனங்களின் படைப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மை நிறுவனத்தில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று John Sculley எழுதிய “Pepsi to Apple”. அப்போது நான் பெப்ஸி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாலும் சுஜாதா சில விஞ்ஞான படைப்புகளில் மக்கின்டாஷ் என்ற குறிப்பிட்ட அந்த அபார “வஸ்து“வின் பால் எழுந்த ஈர்ப்பினாலும் அப்புத்தகத்தை வாங்க ஆவலாக இருந்து சில மாதங்கள் கழித்து சென்னைக்கு பணி நிமித்தமாக வந்தபோது எழும்பூர் ரயில் நிலையத்தின் ஹிக்கின் பாதம்ஸ் கடையில் கிடைத்ததும் வாங்கி மதுரைக்கு வந்து சேர்வதற்குள் பாதிப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன். பெப்ஸி என்ற அசுர நிறுவனத்திலிருந்து ஆப்பிள் என்ற (அப்போதைய) கைக்குழந்தை நிறுவனத்திற்கு ஜான் ஸ்கல்லி எப்படி அவரது ரசிகராக இருந்த ஆப்பிள் நிறுவனர் Steve Jobs-ஆல் கவர்ந்திழுக்கப்பட்டார் என்ற விவரணைகளோடு, எண்பதுகளின் மத்தியில் மக்கின்டாஷை எப்படி அமெரிக்காவின் சூப்பர் பௌல் தருணத்தில் சந்தைப்படுத்தினார்கள் என்ற முழு விவரங்களும் அப்புத்தகத்தில் மகா சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருந்தன. அப்புத்தகத்தைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதவேண்டும்.

அப்புத்தகத்தைப் படித்ததிலிருந்தே ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஒரு கவர்ச்சி எழுந்திருந்தது. மதுரையில் பெரியார் பேருந்துநிலையத்தின் தள்ளுவண்டிக்கடைகளில் வாங்கிய ஆப்பிள்களைத் தவிர எனக்கு வேறு எந்த ஆப்பிளும் தெரியாது. அப்போது நான் “பொட்டி தட்டும்” வேலையிலும் இல்லாததால் கணிணி என்பதெல்லாம் காணாதனியாகவே இருந்தது. இந்தியாவில் இணையம் அப்போதுதான் எட்டிப்பார்த்திருக்க, மின்னஞ்சல் அனுப்ப மதுரையிலிருந்து சென்னை VSNL நிறுவனத்திற்கு STDயில் மாடம் மூலமாக அழைக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குத் தொண்ணூறு ரூபாய் கட்டணம். XT போய் AT கம்ப்யூட்டர்கள் உலவிக்கொண்டிருந்தன. 40 MB வட்டுவே நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற காலம். மெடிக்கல் ரெப்களுக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் விற்பனை ஆசாமிகள் டிப்டாப் உடையில் வெளியில் சுற்றத் தொடங்கிய காலம். மக்கின்டோஷ் எப்படி இருக்கும் என்று யோசனை அரித்துக்கொண்டே இருந்தது.

தொண்ணூறுகளின் இறுதியில் பேங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது அங்கே மேலாளரைத் தாஜா பண்ணி முதன்முறையாக ஒரு iMac ஒன்றை வாங்கி பெட்டியைப் பிரித்தபோது அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் E.T. யில் வரும் தூர லோகப் பிராணியின் மண்டை மாதிரி, பெரிய நீலக் கலர் முட்டை மாதிரி உள் அவயங்களைக் காட்டிக்கொண்டு இருந்தது. எங்களது பிஸிக்களின் CPUக்களெல்லாம் பெரும்பாலும் தகர மேலாடை இழந்து பே-என்று பிரித்துப் போட்டே பாதி நேரம் இருக்கும். மெமரி அப்கிரேட், ஸ்லேவ் ஹார்ட் டிஸ்க் என்று எதையாவது ஆணிபிடுங்கிக் கொண்டே இருப்போம். பார்ப்பதற்கு பிரித்துப் போட்ட எந்திரன் சிட்டி ரோபாட் மாதிரியே இருக்கும். அதையெல்லாம் பார்த்துப் பழகிவிட்டு தி்டீரென்று ஐஸ்வர்யா ராய் மாதிரி (Again எந்திரன்… வேற வழி? இது எந்திரன் காலம். எந்திரன் அல்லது ஐ.ராய் உவமை இல்லாமல் ஒன்றை அனுப்பி “உங்கள் படைப்பில் எந்திரன் பற்றி எதுவும் குறிப்பிடாததால் பிரசுரத்திற்குத் தகுதியற்றதாகிவிட்டது. பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் – பொ.ஆ.” என்று கடிதம் வருகிறது. சரி வலைப்பதிவில் போடலாம் என்று இட்டாலும் Blogger கூடத் துப்பிவிடுகிறது) ஒன்றைப் பார்த்தால் எப்படி இருக்கும்!. அதில் டெர்மினேட்டர் படமெல்லாம் போட்டு – அப்படி ஒரு துல்லியமான வீடியோவை எந்தக் கணிணியிலும் பார்த்ததே இல்லை. ”க்ராஷே ஆவாதாம்டா” ”வைரஸே கிடையாதாம்” ”Ctrl+Alt+Del பண்ணவே வேண்டாமாம்” ”தொங்காதாம்” என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்து மொத்த ஆபிஸூம் கண்கொட்டாமல் ஐமேக்கை வெறித்துக்கொண்டிருக்க – லோ ஹிப் ஷீலாவைக்கூட யாரும் சைட் அடிப்பதாகக் காணோம். புது வேலைக்காக வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தபோது ஐமேக்கை பிரிந்து போகச் சோகமாக இருந்தது.

அப்புறம் சில வருடங்கள் ஆப்பிள் தொடர்பற்று இருந்து, அமெரிக்காவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்ததும் அமெரிக்கா(வுக்குப் புதிதாக வந்த) இந்தியக் கலாசாரப்படி சுற்று வட்டார ஷாப்பிங் மால்களில் வாரயிறுதிகளை வாயைப் பிளந்துகொண்டு களித்தேன். Best Buy-இல் பால்போலத் தூய்மையாக 20 இன்ச் தட்டை மானிட்டர்களோடு பாரதிராஜா பட தேவதைகள் போல வரிசையாக அமர்ந்திருந்த ஐமேக்கின் புதிய அவதாரங்களைப் பார்த்தபோது புல்லரித்தது. வீட்டுக்கு ஒன்றை வாங்கிப் போகலாம் என்று பார்த்தால் 1500 டாலர்கள் என்று போட்டிருந்தார்கள்! ஒரு மாத அபார்ட்மெண்ட் வாடகை! அம்மாடி என்று பின்வாங்கி “சரி நமக்கு ஆப்பிள் பிராப்தம் அம்புட்டுத்தான்” என்று நினைத்துக்கொண்டு நடையைக் கட்டினேன். அவ்வப்போது ஆப்பிள் தளத்திற்குச் சென்று விண்டோ(ஸ் மடிக்கணிணி மூலமாக) ஷாப்பிங் செய்வதோடு சரி.

2007 ஜனவரியில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் என்ற புதிய வஸ்துவை அறிமுகம் செய்தது. கடும் குளிர்காலம் – இங்குள்ள ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முதல்நாள் இரவே தடிமனான ஜாக்கெட்டுகளைப் போட்டுக்கொண்டு மக்கள் படையெடுத்து இரவு முழுதும் பனியில் குளிரில் நனைந்து மறுநாள் கடை திறந்ததும் அடித்துப் பிடித்து ஐஃபோனை வாங்கி ஜென்ம சாபல்யம் அடைந்ததை எல்லாச் சானல்களிலும் காட்டினார்கள். நைந்து நொய்ந்திருந்த ஆப்பிள் நிறுவனத்திற்குப் புனர் ஜென்மம் கொடுத்தது – ஸ்டீவ் ஜாப்ஸின் மறு பிரவேசம் – மற்றும் ஐஃபோனின் ஜனனம். அன்று ஆரம்பித்த ஓட்டம் அசுர ஓட்டமாக மாறி ஆனானப்பட்ட மைக்ரோஸாஃப்ட்டையே பின்னுக்குத் தள்ளி ஆப்பிளை முதன்மை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது ஒரு கைக்கடக்கமான சிறிய கைபேசி சாதனம் – நம்பக் கடினமாக இருந்தாலும் அதுதான் நடந்தது – நடக்கிறது.

தொடுதிரை கண்டுபிடிக்கப்பட்டதென்னவோ கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்! ஆனால் அதன் பயன்பாட்டில் புரட்சியைச் செய்தது ஆப்பிள் நிறுவனம் – ஐஃபோனின் மூலமாக. இன்றைக்கு ஆப்பிளின் வருமானத்தில் பாதி ஐஃபோன் மூலமாக வருகிறது என்கிறார்கள். முதல் தலைமுறை மாடலுக்குப் பின் ஐஃபோன் 3ஜி அறிமுகப்படுத்தப்பட்டு பின் 3ஜிஎஸ் வந்தது. அதோடு நிற்கவில்லை. iPad-ஐ களமிளக்கினார்கள். “எது போலவும் இல்லாத, எதோடும் ஒப்பிட முடியாத ஒரு புதிய வகைப் பயன்பாட்டுச் சாதனமாக” iPad-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அதுவும் பெரும் வெற்றி. ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் செப்டம்பர்வரை எண்பது லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்றிருக்கிறது – ஆயிரம் டாலர் விலையில் எட்டாக்கனியாக ஆப்பிள் கணிணிகள் இருக்க அதற்குப் பாதி விலையில் ஆனால் அதிக கவர்ச்சியோடு வெளியிடப்பட்டதும் ஐபேட் வெற்றிக்குக் காரணம் – எல்லாவற்றுக்கும் மேலாக கைக்கடக்கமாக, தொடுதிரையுடன் எங்கு வேண்டுமானாலும் இணையத்தொடர்புடன் எடுத்துச் செல்லும் வசதி மற்ற கணிணிகளை ஆட்டைக்கு வரவிடாமல் செய்துவிட்டது. 2011-இல் இதன் விற்பனை கிட்டத்தட்ட நாலரைக் கோடியாக இருக்கும் என்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள்.

ஐபேட் ஒரு பக்கம், இந்த வருடம் சந்தைக்கு வந்த ஆப்பிளின் இன்னொரு கிளியான ஐஃபோனின் 4 ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு விற்பனை எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தோரு லட்சத்திற்கும் மேல்! போன வருடம் இதே காலகட்டத்தில் அதன் விற்பனை எழுபது லட்சம் மட்டுமே! கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு அதிக விற்பனை! இது ஒரு பெரும் சாதனை. பலன் – பரம வைரியான இருபது வருடங்களுக்கு மேல் பணக்கார நிறுவனமாகத் திகழ்ந்த மைக்ரோசாஃப்டை ஓட்டத்தில் முந்தியது. 2003-இல் 10 டாலரே இருந்த ஆப்பிளின் பங்கு மதிப்பு இன்றைக்கு 320 டாலருக்கு மேல். அடுத்த வருடம் இன்னும் விலை எகிறும் என்று பங்குச்சந்தை நோக்கர்கள் கணித்திருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு ஆப்பிளின் சந்தை மதிப்பு முந்நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல். (இந்திய ரூபாயில் மதிப்பைக் கண்டுபிடிக்க உங்களது அபாக்கஸ்/கூமான் குழந்தைகளை அணுகுக!). ஆப்பிளை விட்டால் இவ்வளவு சந்தை மதிப்பு இருக்கும் மற்ற இரு நிறுவனங்கள் எக்ஸான்மொபிலும் பெட்ரோசைனாவும்! ஆக தொழில்நுட்பவுலகில் இன்று ஆப்பிள் தனிக்காட்டு ராஜாவாக நடைபோடுகிறது. எல்லாம் அந்த 54 வயது இளைஞர் ஸ்டீவ் ஜாப்-இன் மகிமை!

ஒன்று வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து ஈசல் பூச்சிகள் போல அதேபோல பல சந்தைக்கு வருவது தமிழ்ப்படங்களுக்கு மட்டுமல்ல – உலக அளவில் எல்லா மட்டத்திலும் எல்லா நிறுவனங்களிலும் எல்லாச் சந்தைகளிலும் நடக்கிறதுதான். ஐஃபோன் போலவே பல நூறு கைபேசிகள் சந்தைக்கு வந்தாலும் ஐஃபோனின் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மோட்டரோலா போட்டி கைப்பேசி ஒன்றை இறக்கி சந்தையைக் கலக்க ஆரம்பித்ததும் ஆப்பிள் சும்மா இல்லை. இந்த வருடம் ஜூனில் நான்காம் தலைமுறை மாடலாக ஐஃபோன்-4 ஐ அறிமுகம் செய்தது. iPhone 4 இன்னொரு அபார சாதனம். இரண்டு கேமராக்கள். Face Time என்று வீடியோ அழைப்பு வசதி என்று கலக்கலான ஃபோன். சில குறைகள் இருந்தாலும் இன்று வரை ஸ்மார்ட்ஃபோன் வகையில் முன்னணியில் ஓடிக்கொண்டிருப்பது ஐஃபோன் 4 தான். ஆப்பிள் இதயத்திற்கு நல்லதென்றால் iPhone ஆப்பிளின் இதயம் என்று சொல்லலாம்.

உலகின் புருவங்களை வியப்பால் தொடர்ந்து விரியச் செய்து கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

”எவ்வளவோ பண்றோம், இதைப் பண்ண மாட்டோமா” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு எனது ஐந்து வயது HTC கைப்பேசியை (பாதி உயிர்தான் இருந்தது) தூக்கிப் போட்டுவிட்டு இக்கட்டுரையின் முதல்வரியில் வந்த கனவுக்கு மறுநாள் போய் ஒரு ஐஃபோன் 4 வாங்கியே விட்டேன். அதை வெறும் கைபேசி என்று சொல்லிவிட முடியாது. ஆப்பிளின் இணையக் கடையில் ஆயிரக்கணக்கான மென்பொருட்கள். கோடிக்கணக்கான பாடல்கள். கைபேசி என்பது தவிர பல நூறு பயன்பாடுகள். கற்பனைதான் எல்லை என்று சொல்வதைப் போல இதை எது எதற்கோ வித்தியாசமாகப் பயன்படுத்துகிறார்கள்!

போன வாரம் CNN-இல் இளைஞர் குழு ஒன்று வெறும் ஐஃபோன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் கச்சேரி செய்ததைக் காட்டினால்கள். ஐஃபோனை இசைக்கருவி போலப் பாவிக்க மென்பொருள் இருக்கிறது. புல்லாங்குழல்கூட ஊதலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக்கருவியாக அவரவர் ஐஃபோனை உருமாற்றிக்கொண்டு வாசிக்க ஒருவர் பாடினார்! இதேபோல் நிறைய ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் கிளம்பியிருக்கின்றன. இங்கே ஒரு கச்சேரி!

நியூயார்க்கில் ஒரு தந்தையும் மகனும் எட்டு மாதங்கள் கடினமாக உழைத்து பலூன் ஒன்றில் ஒரு High definition கேமராவையும் ஐஃபோனையும் இணைத்து ஒரு லட்சம் அடி உயரத்திற்கு அதை காற்றில்லா வெற்றிடம் வரை பயணிக்கச் செய்து அதன் மொத்த பயணத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். காற்றில்லா வெற்றிடத்திலிருந்து பூமியை சாமான்யனின் செலவில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த வீடியோ இங்கே!

iPhone 4 வாங்கியதும் இது வரை நான் கைபேசியைப் பயன்படுத்திய விதமே மாறிப்போனது. கர்ணன் கவச குண்டலம் மாதிரி எப்போதும் அதை வைத்துக்கொண்டு சின்னச் சின்ன கணிணி விளையாட்டுகளை இறக்கி விளையாடிக்கொண்டு – எனக்கென்னவோ இது முப்பது நாளில் தீர்ந்து போகிற மோகமாகத் தெரியவில்லை. ஐந்து மெகாபிக்ஸல் கேமரா இருப்பதால் கிளிக்கி உடனடியாக Facebook-க்கோ Twitter-க்கோ அல்லது மின்னஞ்சலாகவோ இணையக் குழாமிற்கு அனுப்பிவிடமுடிகிறது. HD video எடுத்து Youtube-க்கு ஏற்றிவிட முடிகிறது. வழி தவறிப் போனால் GPS ஆக வழி கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. iBooks மென்பொருளை தரவிறக்கிக்கொண்டு நிறைய இலவச மின்புத்தகங்களை இறக்கினேன் – தஸ்தாவ்யேஸ்க்கியிலிருந்து எமிலி டிக்கின்ஸன் வரை நிறைய புத்தகங்கள். முந்தா நாள் மறுபடியும் ATT கடைக்குப் போய் மனைவியின் பழைய கைபேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவருக்கும் iPhone 4 ஒன்றை வாங்கிக் கொடுக்க குழந்தைகள் குதித்த குதிக்கு அளவே இல்லை.

நேற்று அதிகாலை வாஷிங்டன் டிஸிக்கு அலுவல்வேலையாகச் சென்றுவிட்டு பாஸ்டனுக்குத் திரும்ப மாலை விமானத்தைப் பிடிக்க நிலையத்திற்கு வந்து – கிடைத்த பொழுதில் மனைவியை அழைக்க Face Time ஐ முதன் முறையாக உபயோகப்படுத்திப் பார்த்தேன். காட்சிக்கு இடையே கண்ணாடியில் முகம்பார்த்துக்கொள்ளும் நடிகையைப் போல iPhone னை முகத்திற்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு அந்தப் பக்கம் வீட்டில் குழந்தைகள் குதூகலிப்பதையும் புன்னகையை அடக்கக் கஷ்டப்படும் மனைவியையும் பார்க்க முடிந்தது வித்தியாசமான சந்தோஷமான அனுபவம். கணிணி யுகத்தில் எல்லாமே இணையம் மூலமாக – சாட், மின்னஞ்சல் என்று சந்திப்புகள் குறைந்து – முகம்பார்த்துப் பேசுவதும் குறைந்துபோய் விட்ட காலகட்டத்தில் ஃபோனை அப்படி உயர்த்தி வைத்துக்கொண்டு பேச வெட்கமாக இருந்தது.

என்ன இனிமேல் வேலைக்கு ஓபியடித்துவிட்டு எங்காவது நண்பர்களோடு போனால் ”நான் மீட்டிங்கில் பிஸி” என்று மனைவியிடம் பஜனை பண்ண முடியாது! Face Time உபயோகப்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கின்றன (வைஃபை வேண்டும்). எதிர்காலத்தில் அவை தளர்த்தப்பட்டு எந்தப் பொண்ணுடனும்…ஸாரி… ஃபோனுடனும் Face Time மூலமாக பார்த்துக்கொண்டு உரையாட முடியலாம்.

ஏற்கனவே கணிணி மூலமாக வீடியோ சாட் செய்ய முடிகிறதுதான். ஆனால் அறை இருட்டாக மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி இருக்கும். கணிணி முன்னால் பிள்ளையார் போல உட்கார்ந்தே ஆக வேண்டும். பவர்கட்டோ இணையக்கட்டோ ஆனால் பேச, பார்க்க முடியாது. ஆனால் ஐஃபோன் மூலமாக இம்மாதிரி இடக்கட்டுப்பாடுகளன்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தொலைபேசலாம். அப்படி எதிர்முனை ஆசாமியைப் பார்த்துப் பேசுவது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். ஆனால் சேட்டைசெய்துகொண்டே அல்லது முகத்தை கேலியாக வைத்துக்கொண்டே மேலாளரிடம் “உடம்பு சரியில்லை ஸார். லீவு” என்று பொய் பேச முடியாது. பாத்ரூமில் உட்கார்ந்துகொண்டு பேச முடியாது. இது மாதிரி சில்லறைக் குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த வசதி குறுகிய காலத்தில் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இம்மாதிரி ஃபோன் வாங்கியதற்கெல்லாம் கட்டுரை எழுதுவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஐஃபோன் வசியம் அதைச் செய்திருக்கிறது. ஆனால்….. கொஞ்சம் இருங்கள். யாரோ அழைக்கிறார்கள்.

நான்: “அலோ”

“அலோ ரவியா? யார்னு தெரியுதா?”

”ஆமாங்க.. ஹிஹி நீங்களா?” நன்கு பரிச்சயமான குரல். ஆனால் யாரென்று தெரியவில்லை.

“நல்லாருக்கியா? அமெரிக்காலதான் இருக்கியா?”

அமெரிக்கா தொலைபேசி எண்ணை அழைத்துவிட்டு இம்மாதிரி ஐன்ஸ்ட்டீன் கேள்விகள் கேட்கும் நண்பர்கள் எனக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் இடைவேளையில் சந்தித்து “என்ன இந்தப் பக்கம்?” வகையறா நண்பர்கள். ஆனால் இவர் யாரென்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஐஃபோன் இன்றைய பழமொழியாகக் காட்டியது ”உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள். நீங்கள் யாரென்று நான் சொல்கிறேன்” – நேரம்! யாராக இருக்கும்? ஃபோன் திரை வேறு ‘Unidentified number’ என்று காட்டுகிறது.

“ஆமாங்க. இங்கிட்டுதான் இன்னும் இருக்கேன்”

”பாத்து கொள்ள வருஷமாயிடுச்சே. எப்ப இந்தப் பக்கம் வர்றதா உத்தேசம்?”

ஜூலையில்தான் போய்விட்டு வந்தேன் என்று சொல்லலாமா என்று யோசித்து ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று எகிறுவாரோ என்று பயமாக இருந்தது – யாரென்று தெரிந்தால்தானே? ”வரணும் ஸார்… அடுத்த வருஷம் வரலாம்னுட்டுருக்கேன்”

“என்ன அங்க போய் ரொம்பத்தான் மாறிட்டே? வாங்க போங்கங்கறே? ஸார்ங்கறே? என்னடா ஆச்சு உனக்கு?”

யாரென்று சொல்லித் தொலையேன் எழவே என்று கத்தலாம் போல இருந்தது.

“ஹிஹி.. சும்மாத்தான். இங்க ஆபிஸ்ல இருக்கேன். வேலை மும்முரம் அதான். தப்பா நெனச்சுக்காதே”

”நீதான் எப்பவும் பிஸி பிஸிம்பியே… இன்னும் எழுதறியா?”

”எப்பவாவது. நேரம் இல்லை முன்ன மாதிரி”

”சரி ஐஎஸ்டி கால். நீ எனக்கு சனிக்கிழமை காலைல கட்டாயம் ஃபோன் பண்ணு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்குத்தான் Vonage இருக்கே. இந்தியா கால் ஃப்ரீதானே? சனிக்கிழமை காலைல மறக்காம ஃபோன் பண்ணனும் என்ன? நீ மட்டும் பண்ணலை அப்புறம் நான் உன்னைக் கூப்பிடவே மாட்டேன்” வைத்தே விட்டார்(ன்).

Face Time!!!!!

***

நன்றி: தென்றல்

Advertisements
பிரிவுகள்:Uncategorized
 1. 1:10 பிப இல் ஜனவரி 5, 2011

  நானும் வத்திராயிருப்பு தான்.
  திரு.என்.சொக்கன் கூட உங்களை தெரியுமா? என்று கேட்டார்.
  இப்போதான் திரு.செந்தில்நாதன் மூலம் இந்தபதிவு கிடைத்தது.
  நன்றி.

 2. 7:29 பிப இல் ஜனவரி 5, 2011

  உங்களுடைய பழைய பதிவை படித்ததில்,உங்க வீடு அக்ராஹாரம் நடுத்தெருவில், பெருமாள் கோவிலுக்கு வடக்கே
  சரியா?
  ராகவன்னு ஒருவர் நாடார் ஸ்கூலில் வேலை பார்த்தார். உங்களுக்கு தெரியுமா?அனேகமா அவருடைய வீட்டுக்கு அருகில்தான் உங்க வீடும்; சரியா? plz reply

 3. 4:33 முப இல் ஜனவரி 7, 2011

  அருமையா எழுதி இருக்குறீங்க…

 4. 3:54 பிப இல் நவம்பர் 14, 2011

  Sundar,
  Really impressed with your narration. Great enjoyed like reading a great novel from tamil writer jaikandhan….

  regards
  saravanan

 5. Anonymous
  7:57 பிப இல் ஜனவரி 9, 2014

  அண்ணே.. கால் பண்ணது நாந்தாண்ணே..என்ன தெரியல? – அனானி

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: