இல்லம் > Uncategorized > நானொரு மேடைப் பாடகன்!

நானொரு மேடைப் பாடகன்!

நண்டு சிண்டெல்லாம் ‘மும்பே வா அம்பே வா’ என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டுகள். இதில் முக அபிநயம் வேறு! நாமெல்லாம் ச்சோ ச்வீட் என்று புளகாங்கிதமடைந்துகொள்கிறோம். இதெல்லாம் அநியாய ஓர வஞ்சனையாகத்தான் எனக்குப் படுகிறது. நானெல்லாம் அதே நண்டு சிண்டாக இருந்தபோது பாடிய “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா” பாட்டுக்கு விளக்குமாற்றடி (இலக்கணம் – முதல் மூன்றடி முதுகில் முவ்விளார் – ஈற்றடி உள்ளங்கையில்) தான் கிடைத்தது. பாட்டி தலையடித்துக்கொண்டே புலம்பிக்கொண்டு அடுக்களைக்குப் போக, தாத்தா கொல்லைப்புறத்தில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு யாரையாவது கண்டார, வல்லார என்று வைது கொண்டிருக்கையில் திண்ணை தட்டிக் கதவைத் தாண்டிய மெயின் தகரக் கதவில் புளியமரத்துக் குச்சிகளால் டங்கு டகர டங்கு டகர என்று நாராசமாக 1000 வாட்டுக்கும் மேலான ஒலியில் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறேன் தெரியுமா? ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.
வற்றாயிருப்பு நடுத்தெருவில் வீனஸ் இசைக்குழு என்று ஒன்றை மணி ஐயர் வைத்திருந்தார். அவர் மகன் ட்ரம்ஸ் வாசிக்க, மகள் பாடுவார். மணி ஐயர் தபலா, மிருதங்கம், மோர்சிங் என்று ஏழெடெ்டு வாத்தியங்களை சுற்றியமைத்துக்கொண்டு பாட்டுக்குத் தகுந்தபடி அஷ்டாவதானம் செய்வார்.  குடும்ப ஆர்கெஸ்ட்ரா அது.
கடைத்தெரு மேடைக்குப் பின்புறம் இருந்த முத்தாலம்மன் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் பந்து, பலூன், பஞ்சு மிட்டாய், ஜங்ஜங்கென்று பொம்மை ஜிஞ்சா அடிக்க பட்டை பட்டையாய் மூங்கிலில் சுற்றியிருக்கும் ஜவு்வு மிட்டாய் போக, இரவில் வீனஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சிதான் ஹைலைட். மணி ஐயரின் மகள் “செல்லாத்தா செல்ல மாரியாத்தா” என்று ட்ரம்ஸ் அதிரப் பாடும்போது கைதட்டும் விசில்களும் தூள் பறக்கும். எனக்கும் லேசாக அருள் வருவது போல பிரமையெழும். வற்றாயிருப்பில் ஆர்க்கெஸ்ட்ரா என்பது காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதைப் போல – எப்போதாவது நிகழும் அபூர்வம். அது நிகழும்போது சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைத்து மக்களும் குவிந்துவிடுவார்கள்.
வீனஸ் இசைக்குழு கொஞ்சம் பிரபலமாகி அம்மன் பாடல்களிலிருந்து அடுத்த நிலைக்குச் சென்று சினிமா பாடல்களெல்லாம் நிறையப் பாட ஆரம்பித்தார்கள். அது எண்பதுகளில் ஆரம்ப வருடங்களில். வெள்ளைப் பிள்ளையார் கோவில்தாண்டி, அரிசன மக்கள் குடியிருப்புக்கு முன்பாக ஒரு சிறிய பேருந்து நிலையம் இருந்த நினைவு. கூமாப்பட்டி செல்லும் பேருந்துகள் உள்ளே மெதுவாக நுழைய நடத்துனர் படியில் நின்றுகொண்டு ஜீவன் போவது போல விசிலடித்துக்கொண்டேயிருக்க, ஏற இறங்க யாருமில்லாவிட்டால் அப்படியே வெளியேறிச் சென்றுவிடும். நிறைய பன்றிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிக்கும். அந்த இடத்தில் நடந்த இரவுக் கச்சேரி ஒன்று நன்றாக நினைவிருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பாடகர்கள் வந்திருந்தார்கள். பயணங்கள் முடிவதில்லை படத்திலிருந்து மணியோசை கேட்டு எழுந்து பாடலை அட்டகாசமாக அதே இருமல் தொண்டைச் செருமலுடன் பாடினார் அந்தப் பாடகர். கடைவாயிலிருந்து ரத்தம் கித்தம் வருகிறதா என்று கிலியுடன் அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதற்குப்பின் எத்தனையோ கச்சேரிகள் – சுற்று வட்டாரத்தில் நடந்த ஆர்க்கெஸ்ட்ரா எதையும் விட்டதாக நினைவில்லை. திரையில் நிழலாகத் தோன்றும் பாத்திரங்கள், பதிவுசெய்யப்பட்ட வசனங்கள், பாடல்களைப் பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, நிஜத்தில் பாடல்கள் கேட்கையில் எழும் பரவசம் வித்தியாசமானது. “அப்படியே டிஎம்எஸ் மாரியே பாடறாண்டா!” போன்ற ஆச்சரியப்படல்கள் சுவையானவை. ஆர்க்கெஸ்ட்ரா துவங்குவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னதாக மேடை அமைப்பு, ஒலியமைப்பு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க நாங்களெல்லாம் கூடிவிடுவோம். ஒவ்வொரு வாத்தியக்காரர்களாக வந்து அவரவரர் வாத்தியங்களை இசைத்துச் சரிபார்ப்பதைப் பார்ப்பதும் கேட்பதும் பெரிய திரில். டங் டங் டொய்ங் டொய்ங் செக் செக் மைக் டெஸ்டிங் என்று சிதறலாகக் கேட்டுக்கொண்டிருக்க தி்டீரென்று அனைவரும் ஒருமித்து ஆர்க்கெஸ்ட்ராவின் பிரத்யேக அறிமுக சங்கீதத்தை இசைத்துப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கும்போது புல்லரிக்கும். அடுத்ததாக என்ன பாடல் வரும் என்று தெரியாது ரொம்பவும் பரபரப்பாக இருக்கும். வற்றாயிருப்பு போன்ற பெருங்கிராமத்தில் பெண்களுக்கு அதிப பட்ச மேக்கப் பாண்ட்ஸ் பவுடர்தான். ஆர்க்கெஸ்ட்ரா பாடகிகள் “திருத்தமான மேக்கப்” (இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்திய எழுத்தாளர் யார்? மறந்து போச்) அணிந்து வருவது ஆர்க்கெஸ்ட்ராவுக்குக் கூடுதல் அழகு. 
தொண்ணூறுகளில் பெப்ஸியில் பணிபுரிந்த போது வருடாவருடம் பெப்ஸி ஆண்டு விழா ஒன்று நடத்தி Top Floor-லிருந்து Shop Floor வரை அனைத்து தொழிலாளர்களையும் குடும்பத்தோடு அழைத்து நாள் முழுதும் பல்வேறு விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. பேராசிரியர் ஞான சம்பந்தன் அவர்களை – அமெரிக்கன் கல்லூரியில் பணியிலிருந்ததாக நினைவு – அழைத்து ஒரு Stand up Comedy நிகழ்ச்சி நடத்தினோம். ”பசங்கள்ளாம் சேர்ந்து கிரிக்கெட் மேச்சு பாத்துக்கிட்டுருந்தாய்ங்க. சச்சின் செஞ்ஜூரி போட்டு மேச்ச நம்ம செயிச்சுட்டோம். அதெப் பாத்துட்டு ஒருத்தெஞ் ஜொன்னான். என் லைஃலயே இந்த மாரி ஒரு மேச்ச பாத்ததில்லடா-ன்னான்” – என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு ”அந்தப் பையனுக்கு ரெண்டு வயசு!” என்றதும் அரங்கமே வெடிச்சிரிப்பு சிரித்தது, சரவெடி மாதிரி சரமாரியாக நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப்போட்டு ஒரு மணிநேரத்திற்குப் பின்பு அவர் நிறுத்திய பிறகும் சிரிப்புகள் எதிரொலித்துக்கொண்டிருந்தன. மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது. அப்போது அவர் தொலைக்காட்சிகளிலெல்லாம் அவ்வளவாக வந்ததில்லை. 
அந்த ஆண்டுவிழாவிற்கு தொழிலாளர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்கி மதுரையிலிருந்து ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவை நிகழ்ச்சி நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர்களை அதில் பங்கு பெற வைத்தாலென்ன என்று ஹெச்ஆர் மேலாளருக்குத் தோண, ஆர்கெஸ்ட்ராவிலிருந்து இருவர் கீ போர்ட், கிட்டார் சகிதமாக ஒரு வாரம் தொழிற்சாலை கான்ட்டீனில் குழுமி பாட விருப்பமிருப்போரைப் பாடச்சொல்லி, சுருதி தாள குரல் பேதங்களுடன் மாரடித்தார்கள். எனக்கு பால்ய பருவ ஒன் மேன் ஆர்க்கெஸ்ட்ராவாகப் பாடியதெல்லாம் நினைவுக்கு வர, உள்ளங்கை குறுகுறுக்க பெயர் கொடுத்துவிட்டேன். காதலுக்கு மரியாதை படத்தில் வரும் தாலாட்ட வருவாளோ பாடல். கீ போர்ட் காரர் மொத்த பாடலின் தாளம் இசை எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு பண்ணி வைத்துக்கொண்டு இடது கையால் விசையொன்றை கப்பலோட்டுவது போல மேலும் கீழும் அசைத்துக்கொண்டிருக்க முதன்முறையாக ஒலிவாங்கியைப் பிடித்து காண்ட்டீனில் பயிற்சி செய்தது நினைவிருக்கிறது. 
ஆண்டுவிழா நடந்தது பசுமலை தாஜ் ஹோட்டலில். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று ஏராளமான கூட்டம். அட்டகாசமாக மேடை அமைத்திருந்தார்கள். ஆர்க்கெஸ்ட்ரா குழுத் தலைவர் வந்து நான் உள்ளிட்ட நான்கு தற்காலிகப் பாடகர்களிடம் “நாங்க ரெண்டு பாட்டு பாடிட்டு நடுவுல நடுவுல உங்களை ஒவ்வொருத்தரா கூப்பிடுவோம். வந்து பாடுங்க” என்றார். கல்லெறியைத் தவிர்ப்பதற்காக அந்த ஏற்பாடு என்று நினைத்துக்கொண்டேன். நன்றாகத் தெரிந்த பாட்டுதான் – இருந்தாலும் மறந்துவிடக்கூடாதென்று ஒரு சிறிய காகிதத்தில் பாடல் வரிகளை எழுதி வைத்துக்கொண்டேன். திடீரென்று என் பெயரைச் சொல்லி அழைக்க மேடையேறினேன். கைகால்கள் உதற, காது மடல்கள் சூடாக, இதயம் படபடக்க – காதலன் முதற் காதலியை…சே…காதலியை முதன்முறையாகச் சந்தித்தது போல ஜூரமாக உணர்ந்தேன். பாடலின் ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்க ஒரு கையை நடுங்குவதைத் தவிர்க்க கால்சராய் பைக்குள் வி்ட்டுக்கொண்டேன். கனமான ஒலிவாங்கி இன்னொரு கை நடுக்கத்தைக் குறைக்க ஒரு வழியாகப் பாடி முடித்தேன். அப்துல் ஹமீது மாதிரி பாடல்களை அறிவித்துக்கொண்டிருந்தவர் அவர் மாதிரியே “அந்த் பாடலை அருமையாகப் பாடிய சுந்தருக்குப் பாராட்டு” என்று உரக்கச் சொன்னதும் அதைத் தொடர்ந்த கைதட்டல் விசில்களும் கேட்காமல் காதுகள் அடைத்துக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்ப நீண்ட நேரமாயிற்று.  அதற்கப்புறம் வேறு எந்த வாய்ப்புமில்லாது தமிழ்கூறும் நல்லுலகம் ஒரு சிறந்த பாடகனை இழந்தது. 
சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையே – பாடல்களை நன்றாகப் பாடமுடியவில்லையே என்ற ஏக்கம் என்னில் நிரந்தரமாக உண்டு. ஆனால் அக்காலகட்டம் போலல்லாது இப்போது திறமைகள் ஒளிந்து கிடக்காமல், ஊடகங்களின் பெருக்கத்தினால் பெருகிய வாய்ப்புகள் மூலமாக – சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகள் – திறமைகள் வெளிச்சம் காட்டப்படுவது மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. 
பாட வராவிட்டாலும் அதற்காக பாடும் ஆர்வத்தை விடாமல் குழந்தைகளைத் தூங்கப் பண்ணுவதற்கு வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது மெல்லிசாக இரவுக்கு வலிக்காமல் பாடுவதுண்டு. அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் நாலைந்து வருடங்களாகக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். நன்றாகப் பாடுகிறார்கள். இப்போது கொஞ்சம் விவரம் தெரிந்து விட்டது. முன்பெல்லாம் நித்தம் இரவில் “டாடி – ஆயர் பாடி மாளிகையில் பாடுங்க” என்று சொல்லி நான் முதல் சரணம் முடிக்கு முன்னரே தூங்கிப் போய்விடுவாள் சின்னவள் துர்கா. சமீப நாட்களில் முதல் வரியை முடிப்பதற்குள் “Dad. You’re way off Sruthi” என்கிறாள். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு அடுத்த வரிக்குப் போக முடிவதில்லை! 
எனக்கு வாழ்நாள் பூராவும் எவ்வளவு பாடினாலும் அலுத்துக்கொள்ளாது குற்றம் சொல்லாது கேட்டுக்கொள்ளும் ரசிகக் கண்மணிகளாக பாத்ரூம் சுவர்கள் மட்டும்தான் மிஞ்சும் போல.
*****
Advertisements
பிரிவுகள்:Uncategorized
 1. 12:16 பிப இல் ஏப்ரல் 23, 2012

  இல்லை திரு சுந்தர் அவர்களே! உங்கள் பாடல்களைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் உங்கள் பதிவுகள் அத்தனையும் பிரமாதம்.

  ஆரம்பத்தில் எழுதி இருந்த வேகத்தை இப்போது காண முடியவில்லை. தயவு கூர்ந்து அடிக்கடி எழுதுங்கள்.

  ஆமையும் முயலும் கதையூடாக இந்தப் பக்கம் வந்தேன்.அருமையான ஒரு அனுபவப் பக்கம். இரண்டு நாளாய் தொடர்ந்து வந்து அனேக பதிவுகள் பார்த்து படித்து முடித்தேன்.

  ’பாலைஸ்,கோணைஸ்,குச்சிஐஸ்’ கதை மிகப் பிரமாதம்.

  தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

 2. 3:29 பிப இல் ஏப்ரல் 24, 2012

  மணிமேகலா, தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. அலுவல் பளுவால் முன்புபோல் அடிக்கடி எழுத இயலவில்லை. ஆனாலும் எழுதவேண்டும் என்ற உத்வேகம் அப்படியேதான் இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன்.

  நன்றி.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: