இல்லம் > Uncategorized > சென்னையின் மழை

சென்னையின் மழை

மழை புரட்டிப்போட்டு நிரப்பி வைத்த சென்னையைப் பற்றி ஆளாளுக்கு ஊடகங்களில் ‘ஏரியை ஆக்கிரமித்துக் கட்டினால் இப்படித்தான் ஆகும்’ என்று துவைத்துக் காயப்போடுகிறார்கள். ‘ஆக்கிரமிப்பு’ என்பது ஒரு பிரச்சினை. இது புறநகர், ஏரி, குளம் என்றில்லை – நகரங்களின் முக்கியப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் விட்டிருந்தால் மீனாட்சி கோவில் கோபுரங்களும், ஸ்ரீரங்க கோபுரமும் கட்டிடங்களில் மறைந்து போயிருக்கும். ஆக்கிரமிப்பு எங்கெங்கும் அனுதினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது ‘ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது’ என்று படம் போட்டு பாகங்கள் குறிப்பதோடு சரி. இது வீடு முழுவதும் கரையான் புற்றை வளர்த்துவிட்டு கன்னத்தில் கடிக்கும் கொசுவை மட்டும் தட்டுவதற்குச் சமானம். அட – புற்றையே தன்னைத் தானே கலைக்கச் சொன்னால் எப்படி? லஞ்ச லாவண்யம் என்ற மழையில் ஊறித் துருப்பிடித்திருக்கும் அரசாங்கங்களும் அதிகாரிகளும் இதில் ஒரு முடியைக் கூட அசைப்பதில்லை. இடைநிலை, கடைநிலை ஊழியர்கள் வாங்கும் லஞ்சம் அவரவர் மேலதிகாரிகளுக்குச் செல்கிறது. மேலதிகரிகள் ஆசியில்லாமல் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் லஞ்சம் வாங்கமுடியாது. மேலதிகாரிகளுக்கு மேலதிகாரி என்று அந்தத் துறை அமைச்சரில் வந்து நிற்காமல் அமைச்சர்களின் மேலதிகரியான முதலமைச்சரிடம்தான் இது போய் நிற்கும். இப்படி முதலமைச்சரில் ஆரம்பித்து மொத்த அரசு இயந்திரமும் நேர்மையைத் துண்டாடி லஞ்சமாகப் பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 
முதலமைச்சர் நேர்மையாக, நியாயஸ்தராக இருந்து அவர் நியமிக்கும் துறையமைச்சர்கள் நேர்மையானவர்களாக இருந்து அப்படியே கடைநிலை ஊழியர்கள் வரை தொடர்ந்தால் எப்படி லஞ்சம் தலைவிரித்தாடும்? வரப்புயர என்ற பழமொழியெல்லாம் லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் பொருந்தாது. அது கோன் -இலிருந்து ஆரம்பிக்கும் விஷயம். தலை சரியாக இருந்தால்தான் வால் சரியாக இருக்கும். இது ஒரு பக்கம்.
புதிதாக ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்படும்போது நில உரிமையாளர்களோ அவர்களது கையாட்களோ புரோக்கர்களோ 40’ க்கு 60’ கற்கள் நடுவதற்குமுன் அரசாங்கம் செய்யக்கூடிய விஷயங்கள் சில உள்ளன. அதில் முக்கியமானது அந்தப்பகுதியின் உள்கட்டமைப்பை முதலில் உறுதிசெய்துகொள்வது. வளர்ந்த நாடுகளில் வீட்டுக்கு வீடு போர்வெல் போடுவதில்லை. ஒரு இடம் குடியிருப்புப் பகுதியாக அனுமதி வழங்குவதற்குமுன்னால், மின்சாரம், தண்ணீர், சாலை, சாக்கடை, குப்பை போன்று எல்லாவற்றுக்கும் திட்டம்போட்டு உள்கட்டமைப்பை நிறுவிவிட்டுத்தான் கட்டிடம் கட்டவே அனுமதிப்பார்கள். நிலம் இருக்கிறது என்பதற்காக உரிமையாளர்கள் இஷ்டத்திற்கு வீடு கட்டிவிடமுடியாது. 
நம்மூரில் நடப்பது என்ன?. தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் என்று எல்லாவற்றிலும் வீடு, நிலம் வாங்கக் கூவும் விளம்பரங்கள். குறிப்பாக வீட்டு மனை விற்கும் எவரும் எந்த நிறுவனமும் நீர் வடிகால், குப்பை, சாக்கடை இவற்றைப் பற்றி மருந்துக்குக்கூட எதையும் குறிப்பிடமாட்டார்கள். வாங்குபவர்களும் இதை உறுதிசெய்துகொள்வதில்லை. எளிமையான ‘மழை நீர் எங்கே போகும்?’ அல்லது ‘குப்பையை எங்கே போடுவது? யார் அள்ளுவார்கள்?’ என்ற கேள்வியைக்கூட யாரும் கேட்பதில்லை. நீருக்கு போர்வெல்லோ அல்லது தண்ணீர் லாரி, கக்கூஸுக்கு செப்டிக் டேங்க் என்ற அளவில்மட்டும் சிந்தித்துவிட்டு, சாக்கடை, குப்பை இரண்டிற்கும் ‘நம் மனையிலிருந்து தெருவில் விட்டால் /போட்டால் போயிற்று’ என்ற சுயநலச்சிந்தனை மட்டும்தான். இதை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. லஞ்சம் மட்டும்தான் ஒரே காரணம். இதில் புழங்கும் லஞ்சப் பணத்தின் அளவு தெரிந்தால் மயக்கம் போட்டு விடுவீர்கள். வேண்டுமானால் மாநில எல்லையில் இருக்கும் செக்போஸ்ட்டில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வேலையிலிருந்தால் அவர்களிடம் ஒரு நாள் ‘வசூல்’ எவ்வளவு என்று எதையாவது கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கேட்டுப்பாருங்கள். அரசுக்கு வரவேண்டிய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் லஞ்சமாக அரசை இயக்குபவர்களின் கைக்குப் போகிறது. எல்லா அரசு துறைகளிலும் இதே லட்சணம்தான். ‘ஒரு காசுகூட லஞ்சம் புரளாத அரசு துறை’ என்று ஒன்றை யாராவது குறிப்பிடமுடியுமா – லஞ்ச ஒழிப்புத் துறை உட்பட? திருடனை காவலுக்கு வைத்த கதைதான் நாம் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் அரசுகள். திருடர்கள் யாரைத் தலைவனாகத் தேர்ந்தெடுப்பார்கள்? யாருக்கு ஓட்டுப் போடுவார்கள்? குறுக்கு வழியில் எதைச் செய்தாவது இருபது வயதுகளில் கோடியைச் சம்பாதித்துவிடவேண்டும் என்ற ஒரு பெரும்பான்மைக் கூட்டமே முனைப்பாகத் திருடுகிறது. திருடர்களுக்கு ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்துகிறது. இதில் மைனாரிட்டியான அப்பாவி, நேர்மை பொதுஜனம் இம்மாதிரி வெள்ளத்தில் மிதந்து தெருவுக்கு வருகிறது. 
நகரம், ஊர் என்பது வீடுகள் நிரம்பிய இடம் மட்டுமல்ல. அது ஒரு கட்டமைப்பு. வீடுகள் தவிர நிறைய உள்கட்டுமானங்கள் செய்யப்பட்டால்தான் அது குடியிருக்க லாயக்கான பகுதியாக இருக்க முடியும். இதை மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு வீடு கட்டுவதில் மட்டும் குறியாக இருந்தால் இப்படித்தான் மழைநீரில் மிதக்கவேண்டிவரும். “கார்ப்பரேஷன்ல இந்த இடம் வராது. பஞ்சாயத்துதான். அவரு நம்மாளுதான். பட்டா வாங்கிரலாம்” என்று மானாவாரியாக விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும் அவலம் தொடர்ச்சியாக பலவருடங்களாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. லஞ்சம் என்ற கருங்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அரசு இயந்திரம் பாராமுகமாக இருக்கிறது. மக்களும் ஆட்டு மந்தை போல இடங்களை வாங்கி ‘நமக்குன்னு ஒரு வீடு’ என்று இருப்பதைத் துடைத்துப்போட்டு வீட்டைக்கட்டிக் குடியேறிவிடுகிறார்கள். 
லஞ்சம் ஊழலைப் பற்றிப் பேசினால் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ போன்று ஒன்றுக்கும் உதவாத பழமொழிகளையும், காலாவதியான வரலாற்றுப் பெருமைகளையும் பேசிக்கொண்டு முட்டாள்த்தனமாகத் திக்கற்றுத் திரிந்துகொண்டிருக்கிறது ஒரு பெருங்கூட்டம். 
சமூகப் பிரக்ஞை என்பது யாருமறியாததொரு வஸ்துவாகி நீணட காலமாகிறது. ‘ஊர் எக்கேடு கெட்டாலென்ன. நாம் நன்றாக இருந்தால் போதும்’ என்ற சுயநலப்பேய் பீடித்திருக்கும் சமூகம் இப்படித்தான் இயற்கைச் சீற்றத்தில் சீரழியும். 
நடந்தவை குறித்து குற்றம் சாட்ட நீளும் விரல்கள் எல்லாத்திசைகளிலும் நீளவேண்டிய ஒரு மோசமான சூழலில்தான் இன்றைய சமூகம் இருக்கிறது.

***
Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: