Hero Puch

எனது இரு சக்கர வாகனங்கள் குறித்த அனுபவங்களை முன்பு எழுதியிருக்கிறேன். ஆனால் இது விடுபட்டுப் போன ஒரு சம்பவம். 
பஜாஜ் எம்-80 கோலோச்சிய காலம். நூறு ஸிஸிக்களில் யமஹாவுக்கு தனி மவுசு. டிவிஎஸ் சுசுகியும், ஹீரோ ஹோண்டாவும் இன்னும் சில உதிரி பைக்குகளும் சந்தையில் குவிந்திருந்தன. ஸ்கூட்டர்கள் ஓட்டுபவர்கள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல பாலன்ஸ் செய்து ஓட்டிச் சலித்து பஜாஜ் எம்-80-க்குத் தாவ ஆரம்பித்திருந்தார்கள். அதில் ஸ்கூட்டரைப் போலவே இடது கைப்பிடியில் கியர் மாற்றவேண்டும். சில சமயம் ஒன்றிலிருந்து நேரடியாக மூன்றுக்கு வழுக்கிக்கொண்டு ஸ்லிப்பாகும். இல்லாவிட்டால் மூன்றிலிருந்து ஒன்றுக்குச் சரிந்துவிடும். இருந்தாலும் அதன் பிரபலம் குறையவில்லை. ஆட்கள், பலசரக்கு, கோழி, நாய், பன்றி, கன்றுக்குட்டியெல்லாம் வைத்துக்கொண்டு அதில் போவார்கள். 
நான் வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதே யெஸ்டியில் தான். பிறகு பெப்ஸியில் வேலைக்குச் சேர்ந்ததும் தினமும் யெஸ்டியில் பழங்காநத்தத்திலிருந்து பரவை சென்று வர மாத சம்பளத்தில் பாதிக்கு மேல் பெட்ரோலுக்கு அழ வேண்டியிருந்ததால் அதில் செல்ல முடியவில்லை. யெஸ்டியில் மண்ணெண்ணை, டீசல் என்று ராமர் பெட்ரோல் மாதிரி ஆளாளுக்கு எதையாவது கலந்து ஓட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அம்மாதிரி செய்ய மனது வரவில்லை. பஸ்ஸில் போய்ப் பார்த்தேன். சரி வரவில்லை. பெப்ஸி நிறுத்தத்தில் நிறுத்த மாட்டார்கள். பரவையில் இறக்கிவிட திரும்ப நடந்து வரவேண்டும். நேரத்துக்குப் போய் வரமுடியாமல் ரொம்பவும் அசெளகரியாமாக இருந்தது. ஓரிரு நாளிலேயே வங்கிக்கு தினமும் சென்றுவரவேண்டிய வேலை எனக்குக் கொடுக்கப்பட்டதால் முதலாளி இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ள அனுமதிகொடுத்ததும் சட்டென்று பாண்டியன் மோட்டார்ஸ் சென்று ஒரு டிவிஎஸ் 50-ஐத் தள்ளிக்கொண்டு வந்தோம். சாலையில் சைக்கிள்கூட என்னை முந்திச் செல்வதைப் போன்ற பிரமை. யெஸ்டியிலிருந்து டிவிஎஸ் -50க்கு இறங்கிய கழிவிரக்கம் சேர்ந்துகொள்ள இரண்டாம் நாளே ஏதோ காரணம் சொல்லி அந்த வண்டி வேண்டாம் வேறு வண்டி வாங்கவேண்டும் என்று அடம்பிடித்து ARASPVPV-Co க்குப் போனால் கடையை இழுத்து மூடும் தறுவாயில் விற்காது ஒரு சில யெஸ்டிகள் பளபளவென நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றுக்கு கொட்டேஷன் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் கொண்டுபோய் கொடுத்ததும் என்னை ஏற இறங்கப் பார்த்து (இக்காலத்திலும் நூறு சிசி பக்கம் போகாத இளைஞனா?) – இது வேண்டாம்பா. கம்பெனியே மூடியாச்சு. ரொம்ப பெட்ரோல் குடிக்கும் என்று நிராகரித்துவிட்டார். 
மறுபடி பாண்டியன் மோட்டார்ஸ் போனேன் – அன்று காலைதான் வந்திறங்கியிருந்த அந்த வசீகர வாகனத்தைப் பார்த்தேன். மான்குட்டி போல இருந்தது அந்த வண்டி. ரெண்டே கியர்தான். முதல் கியர் போட்டு எடுத்ததும் முன்சக்கரம் துள்ளி மேலே எழுந்தது. அவ்வளவு சின்ன வண்டியில் சுலபமாக வீலிங் செய்ய முடிவது அதிசயமாக இருந்தது. அது Hero Puch. 

ஸூப்பர் வேகம். அபார பிக்கப். உடனடியாகப் பிடித்துப்போய் அதை வாங்கிக்கொண்டு பரவைக்கு விரட்டி முதலாளியிடம் காட்ட அவர் அதை வினோத ஜந்து போல பார்த்தார். ‘என்னப்பா வண்டி இது?” என்று கேட்டுவிட்டு பெட்ரோல் டாங்க்கில் எழுதியிருந்ததை மனதுக்குள் படித்துப் பார்த்துவிட்டு அவசர வேலையாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார். 
அன்று மாலையே அதை எடுத்துக்கொண்டு வைகையில் வெள்ளம் வந்து செல்லூர் சாலையெல்லாம் நீர் ஓடிய நேரத்தில் விரட்டிக்கொண்டு விரைந்து வைகைப்பாலத்தைத் தாண்டி சிம்மக்கல் வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்புக்கு வந்து – அங்குதான் அன்று மாலை ரஜினி பெப்ஸியை அறிமுகப்படுத்தவிருந்தார் – எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அருமையான வண்டி. ரஜினி வந்துபோய் கூட்டம் கலைந்து எல்லாம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் உறங்க நள்ளிரவாகிவிட்டது. 
மறுநாள் காலை வண்டியில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருந்ததாலும், தாமதமாகிவிட்டதாலும் பரவாயில்லை ஒரு நாள் தானே என்று அதை வீட்டிலேயே நிறுத்திவிட்டு யெஸ்டியை எடுத்துக்கொண்டு பேக்டரிக்குப் போனேன். முதலாளி அவருடைய காண்டஸா காரில் அப்போதுதான் வந்து இறங்கினார். என் வண்டிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டு நுழைவாயில் அருகிலேயே நின்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் விரைந்து அவரருகில் சென்று ‘வணக்கம் ஸார்’ என்றேன். அவருக்குப் பின்னால் சூசை சாரும், கணேசன் சாரும் பவ்யமாக நின்றிருந்தார்கள். முதலாளியின் கைத்தடிகள் ரெண்டு பேர் சற்று தள்ளி காரருகே நின்றிருந்தார்கள். ‘என்ன இந்த வண்டில வந்துருக்கே? புது வண்டி என்னாச்சு?’ எனக் கேட்க நாள் பதில் சொல்ல முற்படுவதற்குள் அவரே தொடர்தார் ‘அது என்ன வண்டி? ம்ம்ம்ம்ம்… ஆங்.. ஹீரோ பொச்சு. அதை எடுத்துட்டு வர்லியா?’ என்றார். 
***
Advertisements
பிரிவுகள்:Hero Puch, Pepsi
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: